அம்பர்நாத்தில் நகைக்கடை கொள்ளை வழக்கில் 2 பேர் கைது

அம்பர்நாத் நகைக்கடையில் ரூ.2 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் போலீசில் பிடிபட்டனர்.

Update: 2017-10-14 22:49 GMT
அம்பர்நாத்,

அம்பர்நாத்தில் மகேந்திர ஜெயின் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது. அண்மையில் மகேந்திர ஜெயின் ஊழியர்களுடன் வெளியே சாப்பிட சென்றிருந்த நேரத்தில் மர்மஆசாமிகள் அந்த கடைக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்றனர். கடையின் பின் பக்க ஜன்னல் வழியாக வந்து மர்மஆசாமிகள் இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியிருந்தது தெரியவந்தது.

கொள்ளையர்கள் ரூ.2 கோடியே 13 லட்சம் மதிப்புள்ள நகைகளை அள்ளி சென்றிருந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மகேந்திர ஜெயின் போலீசில் புகார் கொடுத்தார்.

2 பேர் கைது

சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் வினோத் சிங் (வயது50) என்பவர் தனது கூட்டாளிகளுடன் வந்து கொள்ளையடித்தது தெரியவந்தது. போலீசார் அவரை வலைவீசி தேடினர். இந்த நிலையில் நேற்று அவர் போலீசில் சிக்கினார்.

விசாரணையில் போரிவிலியை சேர்ந்த பாரஸ் சாபில்தாஸ் என்பவரிடம் அவர் திருடிய நகைகளை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 70 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்