பாசனத்துக்கு கல்லணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் மறியல் போராட்டம்

பாசனத்துக்கு கல்லணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கக்கோரி டெல்டா விவசாயிகள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, சில விவசாயிகள் கதவணை மீது ஏறி மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-10-14 23:00 GMT
காட்டுமன்னார்கோவில்,

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், குமராட்சி காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியாகும். இந்த பகுதிக்கு கல்லணை, கீழணை வழியாக வடவாறு, வடக்கு ராஜன் வாய்க்கால், வீராணம் ஏரிக்கு பாசனத்திற்காக தண்ணீர் வருவது வழக்கம்.

கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துபோனதாலும், கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்துவிடாததாலும் விவசாயத்திற்கு தண்ணீரின்றி விவசாயிகள் அவதியடைந்தனர்.

இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 25-ந் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், இந்த தண்ணீர் கடைமடை பகுதியான காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதிக்கு வரவில்லை என்றும், கூடுதலாக தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இது குறித்து அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கடலூர் மாவட்ட விவசாயிகள் நேற்று அரியலூர் மாவட்ட பகுதியான கீழணை வடவாறு கதவணை அருகே சென்னை-கும்பகோணம் சாலையோரம் நேற்று ஒன்று திரண்டனர். பின்னர், அவர்கள் விவசாய சங்க தலைவர் இளங்கீரன் தலைமையிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பிரகாஷ் முன்னிலையிலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விவசாய சங்க துணை தலைவர் நஜீர் அகமது, விவசாயிகள் கென்னடி, கலியமூர்த்தி, வெங்கடேசன், மூர்த்தி, கல்யாணராமன், மூவேந்தன், அறிவழகன், தொல்காப்பியன், ராஜவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மறியலில் ஈடுபட்டவர்கள், கல்லணையில் இருந்து கீழணைக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும், வீராணம் ஏரி, வடக்குராஜன் வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கோஷங்களை முழங்கினர்.

இது பற்றி தகவல் அறிந்த மீன்சுருட்டி, டி.பழுர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் பொதுப்பணி துறை உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

அப்போது, ஆத்திரமடைந்த விவசாயிகள் சிலர், வடவாறு கதவணையின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, இப்பிரச்சினை குறித்து வரும் திங்கட்கிழமை பேசி முடிவு செய்யலாம் என்று போலீசார் கூறினர். இதை ஏற்ற விவசாயிகள் கதவணையில் இருந்து இறங்கினர். மேலும், 3 மணிநேரமாக மறியலில் ஈடுபட்ட விவசாயிகளும் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்