சார்ஜா, துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.43 லட்சம் தங்கம் பறிமுதல்

சார்ஜா, துபாயில் இருந்து சென்னைக்கு விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.43 லட்சம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2017-10-14 23:15 GMT
ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமானங்களில் வந்த பயணிகளை அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர். இந் நிலையில் துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது சென்னையை சேர்ந்த காஜா ரகமத்துல்லா (வயது 27) சுற்றுலா விசாவில் சென்றுவிட்டு வந்தார்.

வாலிபர் கைது

அவரை சோதனை செய்த போது ‘பாப்கார்ன் மேக்கரில்’ மறைத்து வைத்திருந்த 850 கிராம் எடையுள்ள சுமார் ரூ.25 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கைப்பற்றினர். அதேபோல் சார்ஜாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் சென்னையை சேர்ந்த முகமது உசேன் (33) மற்றும் 2 பெண்களிடம் இருந்து சுமார் ரூ.18 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் தங்க நகைகள், 8 விலை உயர்ந்த செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக காஜா ரகமத்துல்லாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முகமது உசேன் உள்ளிட்ட 3 பேரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்