நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி விரிவுபடுத்தப்படும் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பேட்டி

சென்னை மாநகரில் குற்றங்களை தடுக்கும் முயற்சியாக நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி விரிவுபடுத்தப்படும் என்று போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறினார்.

Update: 2017-10-14 22:45 GMT
சென்னை, 

சென்னை மாநகரில் வலம்வரும் கொள்ளையர்களை பிடிக்க நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டு வருகின்றன. பழைய குற்றவாளிகள் மாறுவேடத்தில் திரிந்தாலும் இந்த நவீன கேமராக்கள் அதை கண்டுபிடித்து கட்டுப்பாட்டு அறைக்கு எச்சரிக்கை விடுக்கும்.

இந்த நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் ஏற்கனவே சென்னையில் தியாகராயநகர், பாரிமுனை, பூக்கடை, சென்டிரல் உள்ளிட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது, புதுப்பேட்டை கோமளஸ்வரன் பேட்டை புறக்காவல் நிலையத்திலும் இந்த நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

அதற்கான கட்டுப்பாட்டு அறையை பெருநகர சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில், கூடுதல் போலீஸ் கமிஷனர் சாரங்கன், இணை போலீஸ் கமிஷனர் மனோகரன், துணை போலீஸ் கமிஷனர் பர்வேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர், போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

48 சி.சி.டி.வி. கேமராக்கள்

சென்னை மாநகரத்தை சி.சி.டி.வி. கேமரா கண்காணிப்பின் கீழ் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளோம். அதன்படி, தற்போது, எழும்பூர், ஆதித்தனார் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட தெருக்களில் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் மற்றும் 4 சக்கர வாகன உதிரி பாகங்களின் விற்பனையை கண்காணிக்க 48 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து புரசைவாக்கத்தில் பல்வேறு தெருக்களை கண்காணிக்கும் பொருட்டு 36 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் குற்றங்களை தடுக்கும் முயற்சியில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி விரிவுபடுத்தப்படும். சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்ட இடத்தில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது.

24 மணி நேரமும் கண்காணிப்பு

தீபாவளிக்காக தொடங்கப்பட்டாலும், கண்காணிப்பு கேமரா மூலம் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் இந்த திட்டத்தை நிரந்தரமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். இந்த கட்டுபாட்டு அறை அந்தெந்த காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்