மரங்களையும், இயற்கை வளங்களையும் பாதுகாப்பது பொதுமக்களின் கடமையாகும் கலெக்டர் பேச்சு

மரங்களையும், இயற்கை வளங்களையும் பாதுகாப்பது பொதுமக்களின் கடமையாகும் என்று கலெக்டர் ராமன் கூறினார்.

Update: 2017-10-14 22:45 GMT
வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் உள்ள இயற்கை வளத்தை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்ட உட்கோட்ட காவல்துறை சார்பில் விதைப்பந்து வீசும் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி செங்காநத்தம் மலைப்பகுதியில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன், மாவட்ட வனத்துறை அலுவலர் சுமேஷ்சுமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியம் வரவேற்றார். கலெக்டர் செங்காநத்தம் மலைப்பகுதியில் மரக்கன்றுகள் நட்டு, விதைப்பந்துகள் வீசினார். பின்னர் அவர் பேசியதாவது:-

ஒரு காலத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள மலைகளில் ஓங்கி வளர்ந்த மரங்கள் காணப்பட்டன. ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் ரெயில் போக்குவரத்துக்கு மரங்கள் தேவைப்பட்டன. அதற்கான மரங்கள் தேர்வு செய்யப்பட்டபோது, வேலூர் மலைகளில் காணப்பட்ட மரங்கள் சாதகமாக இருந்தன. இதனால் வேலூர் மாவட்ட மலைகளில் உள்ள மரங்கள் வெட்டி எடுக்கப்பட்டன. அதற்கு காரணம் வேலூர் மாவட்டத்தில் உள்ள மலைகளின் உயரம் மிகவும் குறைவாகவும், மரங்களை எளிதில் கொண்டு வருவதற்கான சூழல் காணப்பட்டதே. அதனால் மலைகளில் இருந்த அனைத்து மரங்களும் வெட்டப்பட்டன.

அதேபோல் ஏலகிரிமலையில் உள்ள பழமையான பாம்பாறு பொதுமக்களின் முக்கிய நீர்ஆதாரமாக திகழ்ந்தது. ஆனால் காலப்போக்கில் ஆக்கிரமிப்பு காரணமாக நீர்வழி பாதைகள் மறைந்து தற்போது வறண்டு காணப்படுகிறது. இயற்கை வளங்களை இழந்ததால் வேலூர் மாவட்டம் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. இதுதொடர்ந்து நீடித்தால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, மலைப்பகுதிகளில் மரங்கள் வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக ஆலமரம், வேம்பு, தேக்கு, சப்போட்டா உள்ளிட்ட பல்வேறு மரங்கள் மலைப்பகுதியில் நடப்படுகிறது. இங்கு நடப்படும் மரக்கன்றுகள் மற்றும் விதைப்பந்துகளை மலைக்கிராம மக்கள் பாதுகாத்து மீண்டும் மரங்கள் நிறைந்த மலைகளாக மாற்ற உறுதி ஏற்க வேண்டும். மரங்களையும், இயற்கை வளங்களையும் பாதுகாப்பது பொதுமக்களின் கடமையாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து அவர், அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வாங்கினார்.

பின்னர் போலீஸ் சூப்பிரண்டு பகலவன் தலைமையில் ஆயுதப்படை போலீசார் 25 குழுக்களாக அமைக்கப்பட்டு மலைப்பகுதியில் மரக்கன்றுகள் நட்டனர். பின்னர் அவர்கள் விதைப்பந்துகளையும் வீசினார்கள். இதில் பகவதி சித்தர் சுவாமிகள், டாக்டர் முகமது சயி உள்பட பலர் கலந்து கொண்டனர். இன்ஸ்பெக்டர்கள் புகழேந்தி, அறிவழகன், வனத்துறையினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்