கலாம் கண்ட கனவை நிறைவேற்றுவோம்!

இளமைக் காலத்தில் செய்தித்தாள்களை வீடுகளுக்குப் போடும் சிறுவனாக இருந்து தனது கடின உழைப்பால், முயற்சியால் தனக்குக் கிடைத்த

Update: 2017-10-14 09:25 GMT
அனைத்துப் பணிகளிலும் முழு அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாடு மூலமாக வெற்றி பெற்று ராமேசுவரத்திலிருந்து ராஷ்டிரபதி பவன் வரை உயர்ந்த மக்களின் ஜனாதிபதி ஆ.ப.ஜெ. அப்துல்கலாம், அனைத்து இளைஞர்களுக்கும் ஓர் ஊக்கசக்தி என்றால் அது மிகையாகாது.

ஜனாதிபதி பதவி ஏற்கும் முன்பு நிருபர்கள் கலாமைப் பார்த்து கேள்வி ஒன்றைக் கேட்டார்கள், “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று. அதற்கு கலாம், “நான் சொர்க்கத்திலிருந்து வருகிறேன்” என்றார். “சொர்க்கமா, அது இந்தியாவில் எங்கு இருக்கிறது?” என்றார்கள் நிருபர்கள்.

அதற்கு கலாம் சொன்னார், “நபிகள் நாயகம் சொல்கிறார், ஒவ்வொரு மனிதனின் தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது என்று. அதன்படி நான் என் தாயை நேசிப்பதுபோல்தான் என் தாய்நாட்டையும் நேசிக்கிறேன். இந்திய வரைபடத்தின் கடைக்கோடியில் பாரதத் தாயின் காலடியில் இருக்கும் ராமேசுவரம்தான் எனது சொர்க்கம்” என்றார் கலாம். அவர் தான் பிறந்த மண்ணை நேசித்தார், தாய்நாட்டை நேசித்தார். நான் முக்கியம் அல்ல, என் நாடுதான் முக்கியம் என்றார்.

இளைஞர்கள் படித்து பட்டம் பெற்று அவர்களின் அறிவையும், திறமையையும் பிறந்த மண்ணுக்குப் பயன்படுத்த வேண்டும். நமது தாய்நாட்டுக்குப் பயன்படுத்த வேண்டும்.

தாய்நாட்டில் பெற்ற அறிவையும் திறமையையும் அயல்நாட்டுக்கு கொடுத்தால், நம் நாடு எவ்வாறு வளர்ச்சி பெறும்? எவ்வாறு வல்லரசாகும்? இளைஞர்களே சிந்தியுங்கள், கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எத்தனையோ பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று அங்குள்ள மாணவர்களை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தி அவர்களிடம் நம்பிக்கை விதைகளை விதைத்தார்.

அதுமட்டுமல்ல, அவர் ஒவ்வொரு முறையும் மாணவர் களிடம் சொல்வது, “நீங்கள் உங்கள் கல்வியில் பெற்ற அறிவும், திறமையும் சமூகத்துக்குப் பயன்பட வேண்டும்” என் பதுதான்.

கலாம் எத்தனையோ ஏவுகணைகளை விண்ணில் செலுத்தி வெற்றிபெற்றாலும், அவரின் மிகப்பெரிய வெற்றியாகவும் பேரானந்தமாகவும் அவர் சொல்வது, மாற்றுத்திறனாளிகள் எளிதாக நடக்க காம்போசைட் மூலக்கூறுகளால் ஆன காலணிகளை உருவாக்கியதைத்தான்.
“அதை அவர்கள் அணிந்து மிகவும் எளிதாக நடந்தும், ஓடியும் சென்றதை என் வாழ்வில் மிகப்பெரிய வெற்றியாகவும், அது சமூகத்திற்கு பயன்பட்டதால் பேரானந்தமாகவும் உணருகிறேன்” என்றார்.

மாணவர்கள் தங்களது கல்வியின் அறிவைக் கொண்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும், அது சமூகத்துக்குப் பயன்பட வேண்டும். மிகச்சிறிய நாடான பின்லாந்து, பொருளாதாரத்தில் பின்தங்கியபோது ஒரு பொறியியல் மாணவரின் கண்டு பிடிப்பான நோக்கியா போன் மூலமாத்தான் பொருளாதாரத்தில் மேம்பட்டது.
இதைத்தான் கலாம் சொல்கிறார், “கல்வி என்பது அறிவு சார்ந்த சமூகத்தை உருவாக்க வேண்டும். அது மூன்று அம்சங்களைக் கொண்டு இருக்க வேண்டும். நடைமுறை வாழ்க்கையில் நல்லது எது, கெட்டது எது என்பதைப் புரிந்துகொள்ள உதவ வேண்டும். சாதி, மதங்களை மெய் ஆன்மிகம் நிறைந்ததாக மாற்றும் திறன் வேண்டும். கல்வி மூலமாக பொருளாதார முன்னேற்றம் பெற வேண்டும்” என்று.

எனவே இன்றைய இளைஞர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். அதை சொந்த வளர்ச்சிக்கு மட்டும் பயன்படுத்தாமல் நாட்டின் வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும்.

அவர் ஒவ்வொரு முறையும் மாணவர்களிடம் சொல்வது, “நம்மால் முடியும்’ என்ற தன்னம்பிக்கையை, உற்சாகத்தை, ஊக்கத்தை நமக்குள்ளே உருவாக்கிக் கொண்டால், நமது நாட்டை வளர்ந்த நாடாக மிளிரச் செய்யலாம். உயரப்பறக்க வேண்டும் என்ற உணர்வு வாழ்வில் பெரிய லட்சியத்தை அடைய வழிவகுக்கும்”.

அந்த லட்சியத்தை அடைய என்ன செய்ய வேண்டும்? அதற்கு கலாம் சொல்கிறார், “உன் உள்ளத்தில் லட்சிய ஒளி பிரகாசிக்கட்டும். லட்சியத்தை அடைய அறிவாற்றலைப் பெருக்கு. அதை அடைய உழைப்பு முக்கியம். உழை, உழைத்துக் கொண்டேயிரு. விடாமுயற்சி உனக்கிருந்தால் நீ யாராக இருந்தாலும் வெற்றி உன்னை வந்து சேரும்.

இன்றைய இந்தியாவின் மக்கள்தொகையில் 60 கோடிப் பேர் இளைஞர்கள். இந்த இளைய சமுதாயம் ஆக்கப்பூர்வமான செயல்திறத்தோடு ஊக்கத்தையும் கைக்கொண்டால் எந்தவொரு சக்தியாலும் நாம் வளர்ந்த நாடாவதைத் தடுக்க இயலாது.

இளைஞர்களுக்கு ஒரு லட்சியக் கனவு வேண்டும். அந்தக் கனவு மூலமாக நம் பாரத நாட்டை அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல முடியும்” என்று உறுதியாகச் சொன்னவர், டாக்டர் அப்துல்கலாம்.

உலகில் எத்தனை சக்திகள் இருந்தாலும் மனஎழுச்சி கொண்ட இளைஞன்தான் மிகப்பெரிய சக்தி. நாட்டின் வளர்ச்சியில் உங்களது பங்கும் வேண்டும் என்பதை உணருங்கள், வளர்ந்த பாரதத்தை உருவாக்க உங்களால்தான் முடியும். கலாம் விட்டுச் சென்ற பணியை தொடருவோம், அவரின் கனவை நனவாக்குவோம்.

மேலும் செய்திகள்