திருக்கோவிலூர் அருகே கர்ப்பிணி எரித்து கொலை காதல் கணவர் கைது

கர்ப்பிணியை தீ வைத்து எரித்து கொலை செய்த காதல் கணவரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறபட்டதாவது:-

Update: 2017-10-14 07:22 GMT
திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே கோமாலூர் கிராமத்தை சேர்ந்தவர் பசுபதி (வயது 25). கூலித்தொழிலாளி. இவரும் அதே ஊரைச்சேர்ந்த தனபால் மகள் மீனா (23) என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து இவர்கள் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு பெங்களூரில் தங்கி குடும்பம் நடத்தி வந்தனர். இதில் மீனா கர்ப்பமடைந்தார். இது பற்றி தகவல் அறிந்த பசுபதியின் உறவினர்கள் அங்கு சென்று பசுபதியையும், மீனாவும் சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர்.

பின்னர் அவர்கள் பசுபதியிடம் இருந்து மீனாவை பிரித்து அவருடைய வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் ஏமாற்றமடைந்த அவர் இது குறித்து திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று பசுபதியின் வீட்டிற்கு மீனா சென்றார். பின்னர் அவர் அங்கிருந்த பசுபதியிடம் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு கூறினார். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பசுபதி தனது உறவினர்களான கலைச்செல்வி, செல்வராஜ் ஆகியோருடன் சேர்ந்து மீனா மீது மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து கொளுத்தியதாக தெரிகிறது.

இதில் உடல் கருகிய நிலையில் உயிருக்காக போராடிக்கொண்டிருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மீனா நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பசுபதியை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்