டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிர் பலியை தடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிர் பலியை தடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-10-14 10:00 GMT
கோட்டூர்,

கோட்டூர் அருகே உள்ள ஆதிச்சபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் அம்புஜம் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் அருணாசலம், ஒன்றிய செயலாளர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேகமாக பரவி வரும் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் ஏற்படும் உயிர் பலியை தடுக்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். கோட்டூர் ஒன்றியத்திற்குட்பட்ட சித்தமல்லி, திருமக்கோட்டை, களப்பால், ஆதிச்சபுரம் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய டாக்டர்களை நியமனம் செய்து டெங்கு, மர்ம காய்ச்சலுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஒன்றிய துணை செயலாளர் செந்தில்நாதன், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் தங்கையன், ஒன்றிய நிர்வாகிகள் ஜெயராமன், பரந்தாமன், உஷாசிவஞானம், செங்குட்டுவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல நீடாமங்கலம் ஒன்றியத்தில் டெங்கு காயச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும், அரிச்சபுரத்தில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த ஆனந்தநாயகியின் சாவுக்கு பொறுப்பேற்று அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டக்குழு உறுப்பினர் பாரதிமோகன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் நேதாஜி, நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் நடேச.தமிழார்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் மார்க்ஸ், கலியபெருமாள், ராதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் உயிர்பலியை ஏற்படுத்தி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை கண்டித்து மன்னார்குடி அரசு மருத்துவமனை முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் வீரமணி, நகர செயலாளர் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் நாகேஷ், பாப்பையன், துரை.அருள்ராஜன், ராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்