காய்ச்சலுக்காக சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவோருக்கு முதலில் எலிசா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்

காய்ச்சலுக்காக சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவோருக்கு முதலில் எலிசா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் டி.ஜி.வினய் அறிவுறுத்தினார்.

Update: 2017-10-13 22:55 GMT

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தனியார் மருத்துவமனை டாக்டர்கள், மருந்தகங்களின் உரிமையாளர்கள் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார். கூட்டத்தில், அவர் கூறியதாவது:–

தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கென அனுமதிக்கப்படுபவர்களுக்கு முதலில் டெங்கு இருக்கிறதா? என்பதை உறுதி செய்யும் எலிசா ரத்தப்பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அந்த பரிசோதனை முடிவில் யாருக்காவது டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவர்கள் பற்றிய விவரங்களை உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

டெங்கு காய்ச்சலுக்கு தேவையற்ற மருந்துகளை உபயோகிக்கக்கூடாது. அங்கீகாரமற்ற டாக்டர்கள் பரிந்துரையின்படி, மருந்துகளை வாங்கி பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். இந்த விவகாரத்தில் மருந்து ஆய்வாளர்கள் தனிக்கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும். போலி டாக்டர்கள் பற்றி தெரியவந்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே டெங்கு ஒழிப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த கல்வித்துறையின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஏடிஸ் கொசுஒழிப்பு தினம் கடைபிடிக்க வேண்டும். அன்று பள்ளி, கல்லூரிகளை முழுமையாக சுத்தப்படுத்த வேண்டும். டெங்குவை ஒழிக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கலெக்டர் டி.ஜி.வினய் திடீரென ஆய்வு செய்தார். அவர் உள்நோயாளிகள் பிரிவு, 24 மணி நேரமும் செயல்படும் காய்ச்சல் தனிப்பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, ரத்த பரிசோதனை பிரிவு, நுண்ணுயிரியல் ஆய்வகம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

மேலும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து நோயாளிகள், அவர்களின் உறவினர்களிடம் கேட்டறிந்தார். இதேபோல நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு, குடிநீர் ஆகியவை குறித்தும் விசாரித்தார். டெங்கு உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த, நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சைகளை அளிக்கவும் டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அருண்சத்யா, இணை இயக்குனர் (நலப்பணிகள்) மாலதிபிரகாஷ், கமி‌ஷனர் மனோகர், நகர்நல அலுவலர் அனிதா, துணை இயக்குனர் (சுகாதாரம்) ஜெகவீரபாண்டியன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) கருப்பையா, மருத்துவமனை கண்காணிப்பாளர் சிவக்குமார், நிலைய அலுவலர் பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்