எல்பின்ஸ்டன் ரெயில் நிலைய விபத்து: விசாரணை அறிக்கை சிவசேனா, காங்கிரஸ் குற்றச்சாட்டு

எல்பின்ஸ்டன் ரெயில் நிலைய நடைமேம்பால விபத்து தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட விசாரணை அறிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என சிவசேனா, காங்கிரஸ் கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.

Update: 2017-10-13 22:54 GMT
மும்பை, 

மும்பை எல்பின்ஸ்டன் ரெயில் நிலைய நடைமேம்பாலத்தில் கடந்த மாதம் ஆயுத பூஜையன்று ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 23 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக மேற்கு ரெயில்வே தலைமை பாதுகாவல் அதிகாரி எஸ்.கே. சிங்க்ளா தலைமையிலான 5 பேர் குழு, விசாரணை நடத்தி அதன் அறிக்கையை மேற்கு ரெயில்வே பொதுமேலாளரிடம் தாக்கல் செய்தது.

அதில், “சம்பவத்தன்று பெய்த கனமழையும், நடைமேம்பாலத்தில் பூ வியாபாரி ஒருவர் அலறிய சத்தம் தவறுதலாக அர்த்தம் கொள்ளப்பட்டு, அதனால் ஏற்பட்ட பதற்றமுமே விபத்துக்கு காரணம்” என்று கூறப்பட்டிருந்தது.

சிவசேனா கண்டனம்

இதற்கு சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவித்து இருக்கின்றன.

இது குறித்து சிவசேனா எம்.பி. அரவிந்த் சாவந்த் நேற்று மும்பையில் நிருபர்களிடம் பேசும்போது, “விசாரணை அறிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் காரணங்கள் முரணாக இருக்கிறது. பொறுப்பில் இருந்து ரெயில்வேயால் எப்படி தப்பிக்க முடியும்?” என்று கேள்வி விடுத்தார்.

மேலும், எல்பின்ஸ்டன் ரெயில் நிலையத்தின் மோசமான நிலை குறித்து எவ்வளவோ முறை பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்தும், ரெயில்வே அதிகாரிகள் அவற்றை புறக்கணிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

காங்கிரஸ் தணிக்கை

மும்பை மண்டல காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் கூறும்போது, “விசாரணை அறிக்கை வெறும் கண்துடைப்பு மட்டுமின்றி, மூடிமறைக்கும் யுக்தி.

மும்பையில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை காங்கிரஸ் கட்சியின் என்ஜினீயர்கள் விரைவில் தணிக்கை செய்வார்கள். தேவைப்பட்டால், தணிக்கை முடிவை ரெயில்வே அதிகாரிகளிடமும், கோர்ட்டிலும் தாக்கல் செய்வோம்” என்றார். 

மேலும் செய்திகள்