நந்திவரம்–கூடுவாஞ்சேரி பேரூராட்சி பகுதியில் காஞ்சீபுரம் மாவட்ட டெங்கு ஒழிப்பு அதிகாரி ஆய்வு

நந்திவரம்–கூடுவாஞ்சேரி பேரூராட்சி பகுதியில் காஞ்சீபுரம் மாவட்ட டெங்கு ஒழிப்பு அதிகாரி அமுதா ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2017-10-13 22:45 GMT

வண்டலூர்,

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெங்கு ஒழிப்பு பணிகளை கண்காணிப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமனம் செய்தார். அதன்படி காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு அதிகாரி அமுதா நேற்று காலை நந்திவரம்–கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள 15–வது வார்டு, மற்றும் 16–வது வார்டு பகுதியில் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்தார். அப்போது வீட்டின் பின்புறம், முன்பகுதியை சுத்தமாக வைத்துகொள்ள பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

கழிவுநீர் கால்வாய்களில் பிளீச்சிங் பவுடர் தெளிக்க உத்தரவிட்டார். அப்போது அவருடன் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, செங்கல்பட்டு மண்டல நகராட்சி இயக்குனர் டாக்டர் இளங்கோவன், காஞ்சீபுரம் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர்(பொறுப்பு) மனோகரன், நந்திவரம்–கூடுவாஞ்சேரி பேரூராட்சி செயல் அலுவலர் முனியாண்டி, உள்பட பலர் உடன் இருந்தனர்.

இதே போல மறைமலைநகர் நகராட்சி பகுதிகளில் டெங்கு தடுப்பு மற்றம் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் நகராட்சி ஆணையர் விஜயகுமார் தலைமையில் டெங்கு நோய் பரவாமல் இருக்கவும், கூட்டு துப்புரவு பணியை அனைத்து வார்டு பகுதிகளிலும் மேற்கொள்ள 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குடிநீர் தொட்டிகளுக்கு அபேட், நீர் தேங்கியுள்ள இடங்களில் சுண்ணாம்பு, பிளீச்சிங் பவுடர் கலவை தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மண்ணிவாக்கம் ஊராட்சியில் உள்ள எம்.ஜி.ஆர். தெருவில் காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி ஆணையர் சலீம்கான், தனி அலுவலர் சிவகலைச்செல்வன், ஆகியோர் தலைமையில் ஊராட்சி பணியாளர்கள் வீடு, வீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் வீடுகளின் வெளியே இருந்த டயர், குடம், போன்ற பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் கால்வாய்களில் பிளீச்சிங் பவுடர் தெளித்தனர். அப்போது அவருடன் உதவி செயற்பொறியாளர் கீதா, ஊராட்சி செயலாளர் ராமபக்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்