அந்தேரியில் இரவில் தனியாக நடந்து சென்ற நர்சு மானபங்கம்
அந்தேரியில் போலீஸ்காரர் என கூறிக்கொண்டு, இரவில் தனியாக நடந்து சென்ற நர்சை மானபங்கம் செய்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மும்பை,
மும்பை அந்தேரி கிழக்கில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் 31 வயது நர்சு ஒருவர் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இரவு 9.45 மணியளவில் இவர் பணிமுடிந்து வீட்டிற்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது நர்சை ஆண் ஒருவர் வழிமறித்தார். அவர் தன்னை போலீஸ்காரர் என கூறி அடையாள அட்டையை காண்பித்தார். மேலும் அந்த பெண் மீது மடிக்கணினி திருடியதாக புகார் வந்திருப்பதாகவும், இது தொடர்பாக விசாரணைக்கு போலீஸ் நிலையம் வரும்படியும் அழைத்தார்.
மேலும் திடீரென அந்த நபர் நர்சின் உடலில் தொடக்கூடாத இடத்தை தொட்டு மானபங்கம் செய்தார்.
போலீஸ் விசாரணை
இதனால் அதிர்ச்சி அடைந்த நர்சு உடனே தனது உறவினர் ஒருவருக்கு போன் செய்து அங்கு வரும்படி அழைத்தார்.
இதனால் பயந்து போன அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த நர்சு சம்பவம் குறித்து அந்தேரி போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நர்சை மானபங்கம் செய்தவர் உண்மையிலேயே போலீஸ்காரர் தானா? என சந்தேகம் எழுந்து உள்ளது. நர்சு பணி முடிந்து தினசரி தனியாக நடந்து செல்வதை நோட்டமிட்டு போலீஸ்காரர் போல் மர்மஆசாமி யாராவது அவரை மானபங்கம் செய்திருக்க வேண்டும் என போலீசார் தெரிவித்தனர். நர்சை மானபங்கம் செய்த அந்த ஆசாமியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.