சாலையின் குறுக்கே நரி ஓடியதால் மினி டெம்போ மரத்தில் மோதி டிரைவர் காயம்
சாலையின் குறுக்கே நரி ஓடியதால் மினி டெம்போ மரத்தில் மோதி விபத்து; டிரைவர் காயம் அடைந்தார்.
ஊத்துக்கோட்டை,
ஊத்துக்கோட்டை அருகே உள்ள பூதூர் கிராமத்தை சேர்ந்தவர் மகிமைகுமார் (வயது 23). டிரைவர். இவர் நேற்று மினி டெம்போவில் சரக்கு ஏற்றிக்கொண்டு சீதஞ்சேரி சென்றார். அங்கு சரக்குகளை இறக்கிவிட்டு பூதூர் புறப்பட்டார். சீதஞ்சேரி காப்புக்காடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே நரி ஒன்று ஓடியது. அதன் மீது மோதாமல் இருக்க டிரைவர் திடீர் என்று பிரேக் பிடித்தார். இதில் கட்டுப்பாட்டை இழந்த மினி டெம்போ சாலையின் ஓரமாக இருந்த மரத்தில் மோதியது. இதில் மினி டெம்போவின் முன் பகுதி நொறுங்கியது.
இந்த விபத்தில் மகிமைகுமார் காயம் அடைந்தார். அவரை கட்சூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். இது குறித்து பென்னாலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.