சசிகுமார் கொலை வழக்கில் கைதான சுபேருக்கு 7 நாள் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் காவல்

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் கைதான சுபேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த 7 நாட்கள் அனுமதி அளித்து கோவை கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2017-10-13 23:00 GMT
கோவை,

கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார்(வயது 35), கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந் தேதி துடியலூர் அருகே உள்ள சுப்பிரமணியம்பாளையத்தில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி சாய்பாபாகாலனியை சேர்ந்த சதாம்(27), அபுதாகீர்( 27) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

இதில் சதாம் கொடுத்த தகவலின்பேரில் கோவை உக்கடம் கோட்டைபுதூர் ஜி.எம்.நகரை சேர்ந்த சுபேர்(33) என்பவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோவை சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கில் முபாரக் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் சசிகுமார் கொலை வழக்கு தொடர்பாக மேலும் விசாரணை நடத்த சுபேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு போலீசார் திட்டமிட்டனர். இதைத் தொடர்ந்து சுபேரிடம் 14 நாட்கள் விசாரணை நடத்த அனுமதி கோரி கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனு நேற்று காலை 11 மணியளவில் நீதிபதி மதுரசேகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சுபேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சுபேரிடம விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி அளிக்க கூடாது என்று கோரி அவரது தரப்பில் வக்கீல் நவ்பல் மனு தாக்கல் செய்தார். இரு தரப்பு மனுக்களையும் ஏற்றுக் கொண்ட நீதிபதி மதுரசேகரன் முதலில் அரசு தரப்பு வக்கீலை வாதாட அனுமதித்தார். அப்போது அரசு தரப்பு வக்கீல் செல்வம் வாதாடுகையில், ‘இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு தொடர்பாக தலைமறைவாக உள்ள மேலும் 2 பேர் பற்றி விசாரிக்க வேண்டி யுள்ளது. எனவே சுபேரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு போலீசாருக்கு 14 நாட்கள் அனுமதி அளிக்க வேண்டும்’ என்று வாதாடினார்.

இதைத் தொடர்ந்து சுபேர் தரப்பில் ஆஜரான வக்கீல் நவ்பல் வாதாடியதாவது:-

சசிகுமார் கொலை வழக்கின் நோக்கம், அதில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகள் பற்றிய விவரங்கள் மற்றும் கைது செய்யப்பட்ட சுபேர் மீது ஏற்கனவே வழக்குகள் ஏதும் பதிவாகி உள்ளதா என்பன போன்ற தகவல்களை சுபேர் கைது செய்யப்பட்ட ஆவணத்திலேயே சி.பி.சி.ஐ.டி. போலீசார் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், அதே விவரங்கள் குறித்து விசாரிக்க போலீஸ் காவல் வேண்டும் என்று கேட்டுள்ளனர். இது தேவையற்றது. எனவே சுபேரிடம் சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரணை நடத்த அனுமதி அளிக்க கூடாது.

இவ்வாறு நவ்பல் வாதாடினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மதுரசேகரன் மனுக்களின் மீதான முடிவை மதியம் 2 மணிக்கு தள்ளி வைத்தார். அதன்பின்னர் மதியம் 2 மணிக்கு மீண்டும் கோர்ட்டு கூடியது. அப்போது சுபேரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு போலீசாருக்கு 7 நாட்கள் அனுமதி அளித்து நீதிபதி மதுரசேகரன் உத்தரவிட்டார்.

விசாரணை முடிந்து வருகிற 20-ந் தேதி மாலை 5 மணிக்குள் மீண்டும் சுபேரை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும், விசாரணைக்கு இடையில் 16-ந் தேதி காலை 10 மணி முதல் 11 மணி வரையும், 19-ந் தேதி காலை 10 மணி முதல் 11 மணி வரையும் போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு போலீஸ் அலுவலகத்தில் அவரது வக்கீல்கள் சுபேரை சந்தித்து பேசலாம் என்றும் நீதிபதி அனுமதி அளித்தார். இதைத் தொடர்ந்து சுபேரை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு போலீசார் பலத்த பாதுகாப்புடன் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். 

மேலும் செய்திகள்