ஆம்பூர் பகுதியில் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு; 500 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது

ஆம்பூர் பகுதியில் 500 வீடுகளை பாலாற்று வெள்ளம் சூழ்ந்தது. தரைப்பாலம் மூழ்கியதால் மேம்பாலத்தில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2017-10-13 22:30 GMT
ஆம்பூர்,

பாலாற்று நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையாலும், ஆந்திர மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையாலும் வேலூர் மாவட்டம் ஆம்பூர் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் கடந்த 10 நாட்களாக பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கடந்த 2 நாட்களாக பாலாற்றில் வரும் வெள்ளத்தின் அளவு அதிகரித்து வருவதால் பாலாற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை முதலே பாலாற்றின் வெள்ளம் மேலும் அதிகரித்தது. காலை 8 மணி அளவில் ஆம்பூரில் உள்ள பாலாற்று தரைப்பாலம் மூழ்கியது. தரைப்பாலத்திற்கு மேல் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது. இதனால் ஆம்பூர் தரைப்பாலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

காலை நேரத்தில் தரைப்பாலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் ஆம்பூரை சுற்றியுள்ள தோல் தொழிற்சாலைகளுக்கு செல்லும் வாகனங்களும், பஸ்களும், பள்ளி பேருந்து, மோட்டார் சைக்கிள் என அனைத்து வாகனங்களும் ஆம்பூரில் இருந்து பேரணாம்பட்டு சாலைக்கு செல்ல ஆம்பூர் - தேவலாபுரம் பாலாற்று மேம்பாலத்தின் வழியாகத்தான் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் ஆம்பூர் - தேவலாபுரம் பாலாற்று மேம்பாலத்தில் செல்ல வேண்டி இருந்ததால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாலாற்றில் இருந்து இருபுறமும் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. எந்த வாகனமும் செல்ல முடியவில்லை. இதனால் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் பெரிதும் அவதிப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆம்பூர் போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கு பின் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

மதிய நேரத்தில் பாலாற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் பாலாற்றை ஒட்டியுள்ள ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட மோட்டுக்கொல்லை, மளிகைத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் தெருக்களிலும், துத்திப்பட்டு ஊராட்சியில் உள்ள கலைஞர் நகர், எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளிலும் பாலாற்று வெள்ளம் புகுந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகளை பாலாற்று வெள்ளம் சூழ்ந்தது. இதனால் வீடுகளில் இருந்த பொதுமக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் நகராட்சி ஆணையாளர் எல்.குமார், ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் எம்.மதியழகன் ஆகியோர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.

மேலும் தண்டோரா மூலம் பாலாற்றங்கரையோரம் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டனர்.

பாலாற்று பகுதியில் தங்கு தடையின்றி செல்ல வசதியாக பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் தாசில்தார் மீராபென்காந்தி மற்றும் வருவாய்த்துறையினர் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்