பெண் தாதா எழிலரசி மீதான குண்டர் சட்டம் ரத்து

பெண் தாதா எழிலரசி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2017-10-13 23:00 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் வி.எம்.சி. சிவக்குமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட பெண் தாதா எழிலரசி தற்போது காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையொட்டி காரைக்கால் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் எழிலரசி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவை ஜெயிலில் ரவுடி மர்டர் மணிகண்டனை எழிலரசி சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. அப்போது அவரிடம், ஜெயிலில் இருந்து வெளியில் சென்றால், தன்னை வி.எம்.சி. சிவக்குமாரின் ஆதரவாளர்கள் கொலை செய்துவிடுவார்கள். அதற்கு முன்பு அவர்களை கொலை செய்ய உதவ வேண்டும் என எழிலரசி கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் சிறைத்துறை ஐ.ஜி. பங்கஜ்குமார்ஜாவின் கவனத்திற்கு சென்றது. இதனை தொடர்ந்து அவர் விசாரணை நடத்தி ஜெயில் துணை சூப்பிரண்டு ஆனந்தராஜ் உள்பட 4 பேரை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். ஜெயிலில் மர்டர் மணிகண்டன்- எழிலரசி சந்தித்து பேச ஏற்பாடு செய்ததற்காக லட்சக்கணக்கில் அதிகாரிகளுக்கு பணம் கைமாறிய திடுக்கிடும் தகவலும் வெளியானது. தொடர்ந்து இந்த விவகாரம் புதுவை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே எழிலரசி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்யப்பட்டதற்கு அவரது தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. மேலும் குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது எழிலரசி மீதான குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கையை ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. 

மேலும் செய்திகள்