கடத்தப்பட்ட ஒரு வயது குழந்தை மீட்பு பெண் உள்பட 4 பேர் கைது
பெங்களூருவில் கடத்தப்பட்ட ஒரு வயது குழந்தையை போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக குழந்தையை கடத்த ரூ.15 ஆயிரம் கொடுத்த பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தொட்டபீமய்யா. இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு ஒரு வயதில் அபிராம் என்ற ஆண் குழந்தை உள்ளது. பெங்களூரு கொத்தனூர் அருகே சபரிநகரில் கடந்த 2 ஆண்டுகளாக வாடகை வீட்டில் தங்கி இருந்து தொட்டபீமய்யாவும், மகேஸ்வரியும் கூலி வேலை செய்து வருகிறார்கள். இந்த நிலையில், கடந்த 5-ந் தேதி மாலையில் வீட்டு முன்பு நின்று தொட்டபீமய்யாவின் குழந்தை விளையாடியது. அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று விட்டார்கள்.
இதுகுறித்து கொத்தனூர் போலீசில் தொட்டபீமய்யா புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தல்காரர்களிடம் இருந்து குழந்தையை மீட்க நடவடிக்கை எடுத்து வந்தார்கள். ஆனால் குழந்தையை கடத்தியது யார்? என்பது தெரியாமல் இருந்தது. பின்னர் சபரிநகர் பகுதியில் இருந்த ஒரு கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தார்கள். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், குழந்தையை கடத்தி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் மூலம் கடத்தல்காரர்களை போலீசார் தேடிவந்தனர்.
பெண் உள்பட 3 பேர் கைது
இந்த நிலையில், குழந்தையை கடத்தியதாக பாகலூர் அருகே வசிக்கும் ஈசாக் கான், அப்துல் வாகித் ஆகியோரை கொத்தனூர் போலீசார் கைது செய்தார்கள். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பாரதிநகரை சேர்ந்த சகானஜ் பேகம் என்பவர், தனது நண்பரான முகமது நூருல்லாவிடம் ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று கேட்டதாகவும், இதனால் முகமது நூருல்லாவுடன் சேர்ந்து கடந்த 5-ந் தேதி தொட்டபீமய்யாவின் குழந்தையை கடத்தியதாகவும் ஈசாக் கானும், அப்துல் வாகித்தும் கூறினார்கள்.
இதையடுத்து, பாரதிநகரை சேர்ந்த சகானஜ் பேகத்தை போலீசார் கைது செய்தார்கள். அவரிடம் இருந்து ஒரு வயது ஆண் குழந்தையும் மீட்கப்பட்டது.
துப்பாக்கிச்சூடு
இந்த வழக்கில் தொடர்புடைய முகமது நூருல்லா தலைமறைவாக இருந்தார். இதையடுத்து, அவரை கைது செய்ய கொத்தனூர் போலீசார் நடவடிக்கை எடுத்தார்கள். இந்த நிலையில், நேற்று காலையில் பாகலூர் அருகே மிட்டகானஹள்ளியில் முகமது நூருல்லா சுற்றி திரிவது கொத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கரியப்பாவுக்கு தெரியவந்தது. உடனே அவர், போலீசார் சிவநாயக், அப்துல் அகமது ஆகியோருடன் அங்கு விரைந்து சென்றார். பின்னர் மிட்டகானஹள்ளியில் நின்று கொண்டிருந்த முகமது நூருல்லாவை போலீசார் சுற்றி வளைத்தார்கள்.
அப்போது அவர் தன்னிடம் இருந்த ஆயுதங்களால் போலீசார் சிவநாயக், அப்துல் அகமது ஆகியோரை தாக்கிவிட்டு தப்பி ஓடினார். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் கரியப்பா தான் வைத்திருந்த துப்பாக்கியால் முகமது நூருல்லாவை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டார். இதில், அவரது தொடையில் குண்டு துளைத்தது. இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். உடனே முகமது நூருல்லாவை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தார்கள்.
பெற்றோரிடம் ஒப்படைப்பு
குண்டுகாயம் அடைந்த முகமது நூருல்லா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதுபோல, முகமது நூருல்லா தாக்கியதால் காயம் அடைந்த போலீசார் சிவநாயக், அப்துல் அகமது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள். இந்த சம்பவம் தொடர்பாக கைதான முகமது நூருல்லா, அவரது நண்பர்கள் ஈசாக் கான், அப்துல் வாகித், சகானஜ் பேகம் மீது கொத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை தொட்டபீமய்யா- மகேஸ்வரி தம்பதியிடம் போலீஸ் அதிகாரிகள் ஒப்படைத்தார்கள். இந்த கடத்தல் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவம் பெங்களூருவில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.