‘டெங்கு காய்ச்சலை ஒழிப்பது பொதுமக்களின் கையில் தான் உள்ளது’ டாக்டர் அசுதோஷ் பிஸ்வாஸ் பேட்டி

டெங்கு காய்ச்சலை ஒழிப்பது பொதுமக்களின் கையில் தான் உள்ளது என்று மத்திய குழுவில் இடம்பெற்றுள்ள டாக்டர் அசுதோஷ் பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2017-10-14 00:15 GMT
சென்னை, 

சென்னை தேனாம்பேட்டையில் நடந்த ஆய்வு கூட்டத்துக்கு பின்னர், மத்திய குழுவில் இடம்பெற்றுள்ள டாக்டர் அசுதோஷ் பிஸ்வாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 40 பேர் உயிர் இழந்துள்ளனர். டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் மட்டுமில்லை, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பரவியுள்ளது. தமிழகத்தில் 4 ஆண்டுகளுக்கு பின்பு அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே, டெங்கு காய்ச்சலால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு காரணம்.

டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் சிகிச்சை மேலாண்மையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இருப்பினும் சில அம்சங்களில் தீவிர கவனம் செலுத்த தவறிவிட்டனர். டெங்கு காய்ச்சலை ஒழிப்பது அரசின் கையில் இல்லை. பொதுமக்களின் கையில்தான் உள்ளது. தங்கள் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்கவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

டெங்கு தீவிரமான நோய் அல்ல

பொதுமக்கள் தண்ணீரை அதிக நாட்கள் பாத்திரங்களில் சேமித்து வைத்து புழங்கும் பழக்கத்தை இன்னும் மாற்றவில்லை. டெங்கு காய்ச்சல் பிற நோய்களை போன்று தீவிரமான ஒரு நோய் கிடையாது. நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திக்கு டெங்கு வைரசை கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது. எனவே, பொதுமக்கள் பீதியடைய வேண்டாம். ஆனால் நோய் தீவிரமடையும் வரை அலட்சியமாக இருக்கக்கூடாது.

அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய கட்டமைப்பு வசதிகள், உபகரணங்கள் உள்ளன. இருப்பினும் உயிரிழப்புகள் நிகழ்வதற்கு காரணம் தாமதமாக மருத்துவமனைக்கு செல்வது, சிகிச்சை எடுக்காமல் அலட்சியமாக இருப்பது, தனியார் மருத்துவமனையில் இருந்து தாமதமாக அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைத்தல், இரண்டாம் கட்ட நோய்த்தொற்று ஆகியவையே ஆகும். மாநில அரசுடன் சேர்ந்து டெங்கு தடுப்பு மேலாண்மையில் தேவையான ஆதரவை அளிக்க உள்ளோம்.

நிலவேம்பு குடிநீர்

நிலவேம்பு குடிநீரின் மருத்துவ குணம் குறித்து பெரிய அளவில் அறிவியல் பூர்வமாக ஆய்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. தமிழகத்தில் சில பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன, சிலருக்கு அது பயனுள்ளதாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் முறையாக அங்கீகரிக்கப்படாத எந்த ஒரு மருந்தையும் நாங்கள் பரிந்துரைக்க மாட்டோம். தமிழகத்தை பொறுத்தவரை டெங்கு காய்ச்சலுக்கு விழிப்புணர்வு அதிகமாக உள்ளது.

டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு அல்லது மேலாண்மை நடவடிக்கைகளுக்கு நிதி பற்றாக்குறை இருந்தால், அதனை ஆய்வு செய்து அதற்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்வதை தீர்மானிப்போம். எங்களுடைய ஆய்வு முடிவடைந்த பின்னர், இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்