நுங்கம்பாக்கத்தில் செல்போன் டவரில் தீ விபத்து
சென்னை நுங்கம்பாக்கத்தில் செல்போன் டவர் திடீரென தீப்பிடித்து எரிந்தது.;
சென்னை,
சென்னை நுங்கம்பாக்கம் ஜெகநாதன் தெருவில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் மேல் இருந்த செல்போன் டவர் திடீரென நேற்று தீப்பிடித்து எரிந்தது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். எழும்பூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், செல்போன் டவரில் உள்ள தீயை உடனடியாக அணைத்தனர். இதில் செல்போன் டவர் முற்றிலுமாக சேதமடைந்தது.
சர்வர் அறையில் ஏற்பட்ட மின்கசிவால் தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்று தீயணைப்பு வீரர் ஒருவர் தெரிவித்தார். தீ விபத்து காரணமாக அந்த இடம் முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது. தகவல் கொடுத்த சில நிமிடத்தில் தீ அணைக்கப்பட்டதால் பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களை பாராட்டினர்.