பெரம்பூர் பகுதியில் பொதுமக்கள்-போலீசாரை கத்தியைக்காட்டி மிரட்டிய 2 ரவுடிகள் கைது
பெரம்பூர் பகுதியில் பொதுமக்கள் மற்றும் போலீசாரை கத்தியைக்காட்டி ரகளையில் ஈடுபட்டு வந்த 2 ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
அம்பத்தூர்,
சென்னை வில்லிவாக்கம் ஐ.சி. எப். போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பெரம்பூர் மேம்பாலம் அருகில் சம்பவத்தன்று இரவு 10 மணியளவில் சாலையில் சென்றவர்களை 2 ரவுடிகள் கத்தியைக் காட்டி மிரட்டியும், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்தும் நள்ளிரவு வரை ரகளையில் ஈடுபட்டனர்.
போலீசை மிரட்டினர்
அப்போது அந்த வழியாக வந்த ரோந்து போலீசாரையும் அந்த ரவுடிகள் கத்தியைக் காட்டி ரகளையில் ஈடுபட்டனர்.
இதுபற்றி போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். உடனே அயனாவரம் போலீஸ் உதவி ஆணையாளர் கூடுதல் போலீஸ் படையுடன் அங்கு விரைந்து வந்தார். போலீஸ் படை வந்ததை கண்ட ரவுடிகள் அங்கிருந்து தப்பினர்.
2 பேர் சிக்கினர்
பொதுமக்கள் மற்றும் போலீசாரை கத்தியைக்காட்டி மிரட்டி ரகளையில் ஈடுபட்டு தப்பிய 2 ரவுடிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
தீவிர விசாரணைக்கு பின்னர் ரகளையில் ஈடுபட்டு தப்பியது ராஜீவ் காந்தி நகர் பகுதியை சேர்ந்த மனோ என்ற மணவாளன் (வயது 23), அப்பு (22) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்கள் மீது கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த ஐ.சி.எப் போலீசார் பின்னர் அவர் களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.