தாலுகா அளவில் பொதுவினியோக திட்ட குறை தீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது

பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் கூட்டம் நாளை(சனிக்கிழமை) தாலுகா அளவில் நடக்கிறது. இதில் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

Update: 2017-10-13 08:08 GMT
விருதுநகர்,

பொது வினியோக திட்டத்தில் காணப்படும் குறைகளை களையும் பொருட்டு தாலுகா அளவில் குறைதீர்க்கும் கூட்டங்கள் நடத்தப்பட்டு, மக்களின் குறைகளை கேட்டு, அவற்றுக்கு உடனடி தீர்வு காணவேண்டுமென உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி நாளை (சனிக்கிழமை) காலை கூட்டம் நடக்கிறது.

ராஜபாளையம் தாலுகா ஜமீன்கொல்லங்கொண்டான் பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்திலும் ஸ்ரீவில்லிபுத்தூர் அழகாபுரி மகளிர்குழு கட்டிடத்திலும், சிவகாசி தாலுகா அதிவீரன்பட்டி கிராம சமுதாயக்கூடத்திலும், சாத்தூர் தாலுகா நீராவிபட்டியில் அரசு தொடக்கபள்ளியிலும் கூட்டம் நடைபெறவுள்ளது.

விருதுநகர் தாலுகா எம்.சின்னையாபுரம் கிராமத்தில் காமராஜர் கல்யாண மண்டபத்திலும், அருப்புக்கோட்டை தாலுகா மண்டபசாலை கிராமத்தில் பெருமாள்கோவில் திருமண மண்டபத்திலும், காரியாபட்டி தாலுகா தோப்பூர் கிராமத்தில் கிராமநிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், திருச்சுழி தாலுகா மானூரில் கிராமநிர்வாக அலுவலர் அலுவலகத்திலும், வெம்பக்கோட்டை தாலுகா நரிக்குளத்தில் கலைமகள் ஆரம்பபள்ளியிலும் கூட்டம் நடைபெறும்.

சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் கூட்டத்தை நடத்தி, கோரிக்கை மனுக்களை பெற்று, அதன் மீது உடன் நடவடிக்கை மேற்கொண்டு, தீர்வுகாண வட்ட வழங்கல் அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். இதனை கலெக்டர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.

மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் கூட்டங்களில் கலந்து கொண்டு பொது வினியோக திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அதனை தெரிவித்தும் ரேஷன் அட்டைகள் தொடர்பான பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் ஆதார், கைபேசி எண் பதிவு செய்தல் தொடர்பான மனுக்களையும் அளித்து தீர்வு காணலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்