ராசிபுரம் அருகே ஓய்வுபெற்ற கால்நடை ஆய்வாளரை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை

ராசிபுரம் அருகே, ஓய்வுபெற்ற கால்நடை ஆய்வாளரை கட்டிப்போட்டு கத்தியை காட்டி மிரட்டி 15 பவுன் நகை, ரூ.1 லட்சத்தை முகமூடி ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.

Update: 2017-10-13 13:00 GMT
ராசிபுரம்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள வடுகம் கிராமம் தூதன்காட்டைச் சேர்ந்தவர் முத்துசாமி (வயது 73). கால்நடை ஆய்வாளராக பணியாற்றி கடந்த 15 வருடங்களுக்கு முன்பு ஓய்வுபெற்றவர். விவசாயமும் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி (62). இவர்களுக்கு கண்ணன் (40) என்ற மகனும், மீனா (42) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்துவிட்டது.

மகன் அவரது மனைவி ராதிகாவுடன் ஆஸ்திரேலியாவில் வேலை பார்த்து வருகிறார். மகள் மீனா பட்டணம் கிராமத்தில் கணவருடன் வசித்து வருகிறார். தற்போது முத்துசாமி மனைவி ஜெயலட்சுமியுடன் அவரது தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இருவரும் வீட்டு சுற்றுச்சுவரின் பிரதான கதவு மற்றும் வீட்டின் கதவு முன்பு இருந்த சிறிய இரும்புகம்பி கதவு இரண்டையும் பூட்டிவிட்டு வீட்டுக்குள் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு ஒரு மணி அளவில் முகமூடி அணிந்த 25 வயது முதல் 30 வயது மதிக்கத்தக்க 5 பேர் கும்பல் சுற்றுச்சுவரின் மீது ஏறி குதித்து உள்ளே சென்று வீட்டுக் கதவின் முன்பு இருந்த இரும்புக்கம்பி கதவின் பூட்டை நெம்பி எடுத்து வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.

பின்னர் அவர்கள் கட்டிலில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த முத்துசாமியின் கையை கட்டிப் போட்டுவிட்டு, கணவன்-மனைவி இருவரையும் கத்தியை காட்டி மிரட்டி பணம், நகை எங்கே உள்ளது? என்று கேட்டுள்ளனர். பயந்துபோய் என்ன செய்வது? என்று தெரியாமல் இருவரும் திகைத்தனர். அப்போது கொள்ளையர்கள் கணவன்-மனைவி அணிந்திருந்த செயின், வளையல், மோதிரம், தோடு உள்பட 15 பவுன் நகைகளையும், பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்தையும் கொள்ளையடித்தனர்.

அப்போது முகமூடி ஆசாமிகளிடம் ஜெயலட்சுமி தாலி செயினை கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் தரமுடியாது என்று கூறிவிட்டு சாமி அறைக்குள் வைக்கப்பட்டிருந்த மஞ்சள்கயிற்றை எடுத்துக்கொடுத்து இதை கட்டிக்கொள் என்று கூறிவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து முத்துசாமியின் மனைவி ஜெயலட்சுமி அவர்களது உறவினர்களுக்கு போனில் தெரிவித்துள்ளார். இதையடுத்து உறவினர்கள் அவர்களது வீட்டுக்கு விரைந்து சென்றனர். இதுபற்றி நாமகிரிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் நாமக்கல் மாவட்டத்துக்கு பொறுப்பு வகிக்கும் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன், ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன் (நாமகிரிப்பேட்டை), செல்லமுத்து (ராசிபுரம்) நாமகிரிப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

மேலும் கொள்ளையில் துப்புதுலக்க நாமக்கல்லில் இருந்து துப்பறியும் போலீஸ் நாய் பொய்கை வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டுக்குள் இருந்து மோப்பம் பிடித்தவாறு அந்த பகுதியில் உள்ள பஸ்நிறுத்தம் வரை ஓடிச்சென்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதேபோல கைரேகை நிபுணர்களுக்கும் தகவல் தரப்பட்டு, அவர்களும் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் பற்றி நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி கொள்ளையர்கள் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், நேற்று முன்தினம் இரவு அவர்களது வீட்டுக்கு வந்த மர்மஆசாமி ஒருவன் மாட்டுக்கு ஊசி போடவேண்டும் என்று கேட்டுள்ளான். அதற்கு முத்துசாமி நான் இப்போது ஊசி போடுவதில்லை என்று கூறியுள்ளார்.

இதனால் கொள்ளையர்கள் இரவே அவரது வீட்டை நோட்டமிட்டு வீட்டில் எத்தனை பேர் தங்கி உள்ளனர்? என்ற விவரத்தை முன்கூட்டியே தெரிந்துகொண்டு போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் கொள்ளையர்கள் கொள்ளையடித்து கொண்டிருந்த நேரத்தில் ஒருவன் பன்னீர் என்று பெயரை சொல்லி இன்னொருவனை அழைத்துள்ளான். எனவே கொள்ளையர்களில் ஒருவனது பெயர் பன்னீர் என்று இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்