டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளி-மலைவேம்பு இலைச்சாறு தினமும் குடிக்க வேண்டும்

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளி-மலைவேம்பு இலைச்சாறு தினமும் குடிக்க வேண்டும் என சித்த மருத்துவ அதிகாரி மோகன் தெரிவித்து உள்ளார்.

Update: 2017-10-13 08:30 GMT
புதுக்கோட்டை,

இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினமும் நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனை வரும் விஷ காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலில் இருந்து பாதுகாத்து கொள்ள நிலவேம்பு கசாயம் குடிக்க வேண்டும்.

மேலும் டெங்கு காய்ச்சல் உள்ளவர்கள் பப்பாளி இலைச்சாறு, மலைவேம்பு இலைச்சாறு ஆகியவற்றை தினமும் 4 வேளை குடிக்க வேண்டும்.
காய்ச்சல், தலைவலி, கண்களின் பின்புறம் அதிக வலி, கண்களை அசைக்கும் போது வலி, வாந்தி, குமட்டல், தூக்கமின்மை, பசியின்மை, கை கால் மற்றும் இடுப்பு பகுதியில் வலி, தோல், மூக்கு மற்றும் பல் ஈறுகளில் இருந்து ரத்தக்கசிவு, தோலில் சிவப்பு புள்ளிகள், ஆசனவாய் மற்றும் நீர்த்தாரையில் ரத்தக்கசிவு போன்றவை டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் ஆகும்.

வீட்டின் அருகே மழைநீர் அதிகமாக தேங்குவதை தவிர்க்க வேண்டும். கொசுக்களை அழிக்க வேப்பிலை, நொச்சி, தும்பை ஆகியவற்றின் இலைகளை கொண்டு புகைபோடலாம். நிலவேம்பு கசாயம் குடிப்பதால் டெங்கு காய்ச்சல் மட்டும் இல்லாமல் அனைத்து வைரஸ் காய்ச்சலும் குணமாகும். காய்ச்சல் வராமல் தடுக்க காலை, மாலை என இரு வேளைகளில் தொடர்ந்து 7 நாட்களுக்கு நிலவேம்பு கசாயம் குடிக்க வேண்டும்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பப்பாளி இலையின் சாரை 10 மில்லி லிட்டர் அளவிற்கு ஒரு நாளைக்கு 4 வேளை வீதம் 5 நாட்களுக்கு கொடுக்க வேண்டும். இந்த சாறு டெங்கு காய்ச்சலால் உடலில் ரத்த தட்டணுக்கள் எண்ணிக்கை குறைவதை தடுத்து ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை உயர்த்தும் மருந்தாகும். மலைவேம்பு இலைச்சாரை 10 மில்லி லிட்டர் வீதம் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை மொத்தம் 5 நாட்களுக்கு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்