கட்டுமான அதிபரிடம் பணம் பறிக்க முயன்ற தாதா டி.கே.ராவ் கைது
கட்டுமான அதிபரிடம் பணம் பறிக்க முயன்ற தாதா டி.கே.ராவ் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
மும்பையை சேர்ந்த பிரபல தாதா டி.கே.ராவ். தாதா சோட்டாராஜனின் நெருங்கிய கூட்டாளி ஆவார். இவர் தாராவியில் வசித்து வருகிறார். கட்டுமான அதிபர் ஒருவரிடம் பெரிய தொகையை கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுபற்றி அந்த கட்டுமான அதிபர் தாராவி போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் டி.கே.ராவ் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இதுபற்றி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
தாதா கைது
இந்த நிலையில், நேற்றுமுன்தினம் மாலை டி.கே.ராவை தாராவியில் உள்ள அவரது வீட்டில் வைத்து குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். நீதிபதி அவரை வருகிற 18-ந் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார். கடந்த மாதம் தான் தானேயை சேர்ந்த கட்டுமான அதிபரிடம் ரூ.40 லட்சம் மற்றும் அடுக்குமாடி கட்டிடத்தில் வீடுகள் ஆகியவற்றை அபகரித்ததாக நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் தம்பி இக்பால் கஸ்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.