சங்கரன்கோவில் அருகே பஸ்–வேன் மோதல்; 6 பேர் படுகாயம்

சங்கரன்கோவில் அருகே பஸ்–வேன் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2017-10-12 22:45 GMT
சங்கரன்கோவில்,

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்து உள்ளது சின்னகோவிலான்குளம். இந்த பகுதியில் ஒரு தனியார் அட்டை கம்பெனி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்ற தொழிலாளர்கள் 6 பேர் வேலை முடித்து நேற்று காலை ஒரு வேனில் தங்களது ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். வேனை சேர்ந்தமரம் அருகே உள்ள கடம்பன்குளத்தை சேர்ந்த முருகன் (வயது 29) என்பவர் ஓட்டினார். சங்கரன்கோவில் அருகே உள்ள பெரியசாமியாபுரம் பகுதியில் வேன் சென்று கொண்டிருந்தபோது, அந்த பகுதியில் அரசு பஸ் ஒன்று வந்தது. கண்இமைக்கும் நேரத்தில் பஸ்சும், வேனும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன.

இதில் வேன் டிரைவர் முருகன், வேனில் இருந்த தொழிலாளர்களான ஊத்துமலையை சேர்ந்த கிருஷ்ணகுமார் (26), கமலா (26), ராணி (21), அந்தோணியம்மாள் (19), இசக்கியம்மாள் (27) ஆகிய 6 பேரும் படுகாயம் அடைந்தனர்.

உடனே அருகில் இருந்தவர்கள் 6 பேரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து ஊத்துமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்