பொதுமக்களின் பங்களிப்பு இருந்தால்தான் எந்த சுகாதார திட்டமும் வெற்றி பெறும் மாநகராட்சி கமிஷனர் பேச்சு

பொதுமக்களின் பங்களிப்பு இருந்தால்தான் எந்த சுகாதார திட்டமும் வெற்றி பெறும் என மதுரை மாநகராட்சி கமிஷனர் அனீஷ்சேகர் கூறினார்.

Update: 2017-10-12 22:45 GMT
மதுரை,

தூய்மை இந்தியா இயக்கத்தின் பரப்புரையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு மதுரையில் நடந்தது. பயிற்சியை மாநகராட்சி கமிஷனர் அனீஷ்சேகர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

தூய்மை இந்தியா இயக்க திட்டம் குறித்து பொதுமக்களிடம் எடுத்து செல்வதற்காக அரசின் உத்தரவின்படி அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளிலும் பரப்புரையாளர்களும், மேற்பார்வையாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடைய பணிகள் சிறப்பாக அமைவதற்காக இந்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பங்களிப்பு இருந்தால்தான் எந்த சுகாதார திட்டமும் வெற்றி பெறும். எனவே பரப்புரையாளர்களும், மேற்பார்வையாளர்களும் தூய்மை குறித்தும், சுகாதாரம் குறித்தும் வீடுவீடாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

களப்பணியின்போது ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதை சமாளிக்கும் திறன் இருக்க வேண்டும். இதற்காக நீங்கள் தகவல் தொடர்பு திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. எனவே இந்த பயிற்சி வகுப்பில் உங்களுக்கான பணிகள் குறித்து கூறுவார்கள். உங்களது சந்தேகங்கள் அனைத்தையும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவர் கேட்கும் கேள்வி மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். எனவே இந்த பயிற்சியில் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டு சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். சுகாதாரமான சுத்தமான ஒரு நகரத்தினை உருவாக்குவதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்தி சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைதொடர்ந்து பரப்புரையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி கையேட்டினை மாநகராட்சி கமிஷனர் அனீஷ்சேகர் வழங்கினார்.

இதில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ஜானகி, பொறியாளர் மதுரம், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்