வீடுகளை காலிசெய்ய 3 மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும்

புறம்போக்கு இடத்தில் கட்டிவசித்துவரும் வீடுகளை காலிசெய்ய 3 மாதம் காலஅவகாசம் வழங்கவேண்டும் என்று பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Update: 2017-10-12 23:00 GMT

வேலூர்,

நாட்டறம்பள்ளி தாலுகா புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் 50–க்கும் மேற்பட்டவர்கள் நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் சண்முகநாதனிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

புதுப்பேட்டை கிராமத்தில் 65 குடும்பங்களை சேர்ந்த நாங்கள் எங்கள் பெற்றோர்கள் காலம் முதல் 45 ஆண்டுகளாக புறம்போக்கு இடத்தில் வீடுகள் கட்டி வசித்து வருகிறோம். இந்த இடத்திற்கு அம்மணாங்கோயில் ஊராட்சிக்கு மனைவரி செலுத்தியும், மின் இணைப்பு பெற்று மின்கட்டணமும் செலுத்தி வருகிறோம். மேலும் குடிநீர் இணைப்பு பெற்று அதற்காக குடிநீர் கட்டணமும் செலுத்தி வருகிறோம்.

இந்த நிலையில் நாங்கள் வசித்துவரும் இடம் நீர்வளஆதாரதுறைக்கு சொந்தமானது என்றும், 21 நாட்களுக்குள் வீடுகளை அகற்றிக்கொள்ள வேண்டும் என்றும் நோட்டீஸ் வந்துள்ளது. இது எங்களை நடுத்தெருவில் நிற்கவைக்கும் செயலாகும்.

எங்களால் வேறுஎங்கும் போகவும் முடியாது. எனவே, 65 குடும்பங்களை சேர்ந்த எங்கள் நிலைமையை கருத்தில் கொண்டு கருணையுடனும், மனிதாபிமானத்துடனும் பரிசீலனை செய்து 3 மாதம் காலஅவகாசம் வழங்க வேண்டும்.

மேலும் நாங்கள் வசிப்பதற்கு அரசு புறம்போக்கு இடத்தில் வீடு கட்டிக்கொள்ள மாற்று இடம் வழங்க ஆவனசெய்ய வேண்டும்.

இவ்வாறு கோரிக்கை மனுவில் கூறி உள்ளனர்.

மேலும் செய்திகள்