அழகன்குளத்தில் அரசு அனுமதியின்றி கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் இடிப்பு போலீசில் புகார்

மண்டபம் யூனியன் அழகன்குளம் கிராமத்தில் அரசு அனுமதியின்றி கிராம நிர்வாக அலுவலக பழைய கட்டிடத்தை இடித்தவர் மீது முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் போலீசில் புகார் செய்துள்ளார்.

Update: 2017-10-12 07:30 GMT
பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் கார்மேகம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- அழகன்குளம் கிராமத்தில் அழகன்குளம், பனைக்குளம் கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 22 கிராமங்களுக்கான கிராம நிர்வாக அலுவலகம் கடந்த 1986-ம் ஆண்டு முதல் இயங்கி வந்தது. இந்த கட்டிடம் பழுதடைந்ததை தொடர்ந்து கடந்த 2011-ம் ஆண்டு தற்காலிகமாக அருகில் உள்ள ஊராட்சி மன்ற கூடுதல் கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. ஆனால் அந்த பழைய கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் சுமார் 30 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேப்பமரம், கான்கிரீட் கிணறு போன்றவை இருந்தது. மேலும் அந்த பழைய கட்டிடத்தில் பழைய தஸ்தாவேஜுக்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பழைய கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை அதே ஊரைச்சேர்ந்த ஆதீசுவரன் என்பவர் ஜே.சி.பி. மூலம் இடித்ததுடன் அங்கிருந்த மரத்தினையும் அகற்றினார்.

இதுதொடர்பாக அப்போதைய கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டதற்கு அரசு சார்பில் இங்கு புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளதாகவும், அதனால் பழைய கட்டிடத்தை இடிப்பதாகவும் தெரிவித்தார். அதன் பின் பல மாதங்களாக அந்த இடத்தில் புதிதாக கட்டிடம் எதுவும் கட்டப்படவில்லை. இதனிடையே அங்கு பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலரும் பணிமாறுதலாகி சென்றுவிட்டார். புதிய கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு காலதாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து அழகன்குளம் முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் இந்து சமூகத்தினர் சார்பில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர்.

அதன் பின் கடந்த ஆண்டு அழகன்குளத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் அதே ஊரைச்சேர்ந்த யூசுப் மகன் செய்யது என்பவர் புதிய கிராம நிர்வாக அலுவலகம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், அந்த கட்டிடத்தை இடிப்பதற்கு எவ்வளவு செலவு செய்துள்ளேன் தெரியுமா? என்று சத்தம் போட்டார். அப்போது தான் அரசு அனுமதியின்றி அந்த கட்டிடம் கிராம நிர்வாக அலுவலர் துணையுடன் இடிக்கப்பட்டுள்ள விவரம் தெரியவந்தது. இதனை தட்டிக்கேட்டதற்கு எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். அவர் தனது ரியல் எஸ்டேட் தொழிலுக்கு பாதை அமைப்பதற்காக அந்த கட்டிடத்தை அகற்றியதாக தெரிகிறது.

மேலும் அந்த கட்டிடத்தில் இருந்த நிலை, ஜன்னல் உள்ளிட்ட பொருட்கள், அந்த வளாகத்தில் இருந்த வேப்பமரம் என சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான அரசு சொத்துக்களையும் எடுத்துச்சென்றுள்ளனர். எனவே அழகன்குளம் கிராம நிர்வாக அலுவலகத்தை எவ்வித அரசு அனுமதியும் இல்லாமல் உடைத்ததுடன் பொது சொத்தினை சேதப்படுத்தி எடுத்துச்சென்ற செய்யது, அதற்கு உடந்தையாக இருந்த அப்போதைய கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கட்டிடம் இடிக்கப்பட்டு ஓராண்டுக்கு பிறகு இந்த பிரச்சினை வெளியே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்