நீலகிரி மாவட்டத்தில் பட்டாசு விற்பனை செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்

நீலகிரி மாவட்டத்தில் பட்டாசு விற்பனை செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன? என்பது குறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவித்து உள்ளார்.

Update: 2017-10-12 06:30 GMT
ஊட்டி,

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் தீபாவளி பண்டிகையும் ஒன்று. மக்களுக்கு இன்னல்களை கொடுத்து வந்ததாக புராணங்களில் சொல்லப்படும் நரகாசுரனை அழித்த தினத்தை நினைவு கூறும் வகையில், தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி விருந்து மற்றும் இனிப்புடன் சந்தோஷத்தை வெளிப்படுத்த பட்டாசு வெடித்து பொதுமக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

பண்டிகை மற்றும் விழா காலங்களில் பட்டாசுகளை வெடிப்பதால் எழும் ஒலி தற்காலிக செவிட்டு தன்மையையும், தொடர் ஒலி நிரந்தரமான செவிட்டு தன்மையையும் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. அதிக ஒலி மற்றும் ஒளியுடன் கூடிய பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசினை தடுக்கும் வகையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, பட்டாசு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள் விவரம் வருமாறு:-

பட்டாசுகளில் அடங்கி உள்ள வேதிப்பொருட்கள் மற்றும் ஒலி அளவின் விவரத்தினை பட்டாசு பேக்கிங் பெட்டியில் குறிப்பிட வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் ஒலி அளவானது நான்கு மீட்டர் தூரத்தில் 125 டெசிபல் அல்லது 145 டெசிபலுக்கு ஒலி அளவுக்கு அதிகமாக உள்ள பட்டாசுகளை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. மேற்கண்டவற்றை பட்டாசு உற்பத்தியாளர்கள் கடைபிடிக்க வேண்டும்.

சில்லறை விற்பனையாளர்கள் 125 டெசிபல் அளவுக்கு மேல் ஒலி எழுப்பும் பட்டாசுகளை கடைகளில் விற்பனை செய்யக்கூடாது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை பொதுமக்கள் வெடிக்கக்கூடாது. 125 டெசிபல் அளவுக்கு கீழ் ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை மட்டுமே வாங்க வேண்டும்.

தீபாவளி பண்டிகை குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதால், நீலகிரி மாவட்ட மக்கள் அனைவரும் அவரவர் குடும்பம், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பாதுகாப்பாகவும் ஒலி மற்றும் காற்று மாசு ஏற்படாமல் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் கொண்டாட வேண்டும்.
ஒலி மற்றும் காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசு வகைகளை தவிர்த்து வண்ண ஒளி தீபங்களால் தீபாவளியை கொண்டாடுங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்