மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் சோதனை: ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் - ஆவணங்கள் பறிமுதல்

அறந்தாங்கி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Update: 2017-10-11 23:00 GMT
அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் வாகனப் பதிவு, வாகனப்பதிவு புதுப்பித்தல், ஓட்டுனர் உரிமம், ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல், வாகனங்களின் தகுதிச்சான்று போன்ற பணிகள் நடை பெற்று வருகின்றன. இந்த பணிகளை மேற்கொள்ள தினசரி நூற்றுக்கணக்கானவர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் அறந்தாங்கி மோட்டார் வாகன அலுவலகத்திற்கு வரும் வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களிடம் தரகர்கள் மூலம் லஞ்சம் பெறப்படுவதாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை சூப்பிரண்டு ரகுபதி தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் சார்லஸ், பங்கஜம் மற்றும் போலீசார் நேற்று மதியம் திடீரென்று அறந்தாங்கி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

லஞ்ச ஒழிப்பு துறையினர் அலுவலகத்தில் நுழைந்தவுடன் அங்கு இருந்த தரகர்கள் சிலர் பணத்தை அலுவலக ஜன்னல் வழியாக அலுவலகத்திற்கு வெளியே தூக்கி எறிந்தனர். உடனே அந்த பணத்தை போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து அலுவலர்கள் மற்றும் தரகர்களிடம் நேற்று மதியம் 1.30 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை 8 மணி நேரம் சோதனை நடந்தது. தொடர்ந்து அலுவலகக்தில் இருந்த ஆவணங்களை சரிபார்த்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.1,35,219 மற்றும் முக்கிய ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றி அதிரடி நடவடிக்கை எடுத்தனர். அறந்தாங்கி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்