காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2017-10-11 23:00 GMT
பென்னாகரம்,

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக உயர்ந்தது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்ததால் நீர்வரத்து வேகமாக அதிகரித்தது.

நேற்று பகலில் நீர்வரத்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. இதைத் தொடர்ந்து நேற்று மாலை நீர்வரத்து மேலும் அதிகரித்து காணப்பட்டது. அதன்படி வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றில் செந்நிறத்தில் கரைபுரண்டு ஓடிய நீர் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டியது. ஒகேனக்கல் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையில் முழங்கால் அளவுக்கு நீர் ஓடியது.

நீர்வரத்து அதிகரித்ததால் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. ஆற்றங்கரையோர பகுதிகளில் குளிப்பதை தவிர்க்குமாறு சுற்றுலா பயணிகளை போலீசார் எச்சரித்தனர். மேலும் கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக-கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலு பகுதியில் காவிரி ஆற்றில் நீர்வரத்தின் அளவை மத்திய நீர்வளத்துறையினர் நேற்று கண்காணித்தனர். ஒகேனக்கல்லுக்கு நேற்று வந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாததால் ஏமாற்றமடைந்தனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்