கணவன் - மனைவி படுகொலை மர்ம கும்பல் வெறிச்செயல்

கொளத்தூர் அருகே வயதான தம்பதி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2017-10-11 23:15 GMT
கொளத்தூர்,

சேலம் மாவட்டம், கொளத்தூரை அடுத்த மேட்டு பனையூர் கோமாளி காடு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 50), விவசாயி. இவருடைய மனைவி முத்துமாரி(45). இவர்களுக்கு சங்கீதா(21) என்ற மகளும், சதீஷ்குமார்(20), ராஜ்குமார்(19) என்ற 2 மகன்களும் உள்ளனர். இதில் சங்கீதா திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எட். படித்து வருகிறார். சதீஷ்குமார் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். ராஜ்குமார் மேட்டூரில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்த நிலையில் சதீஷ்குமாருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய பெற்றோர் உடன் இருந்து கவனித்து வந்தனர்.

இதனிடையே வீட்டில் தனியாக இருக்கும் மகள் சங்கீதா, மகன் ராஜ்குமாரை கவனித்துக்கொள்ள கொளத்தூரை அடுத்த எருமைக்காரனூரில் வசித்து வந்த மாமனார் குருசாமி(72), மாமியார் தங்கா(65) ஆகியோர் கோமாளி காட்டில் உள்ள மாரிமுத்துவின் வீட்டுக்கு வந்து தங்கி இருந்தனர். நேற்று முன்தினம் இரவு வீட்டின் வராண்டாவில் குருசாமி, அவருடைய மனைவி தங்கா, மகள் வழி பேத்தியான சங்கீதா ஆகிய 3 பேரும் தனித்தனியே கட்டிலில் படுத்து தூங்கினர். ராஜ்குமார் வீட்டின் உள்ளே படுத்து தூங்கினார்.

நள்ளிரவில் அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று வீட்டின் வராண்டாவில் கட்டிலில் படுத்திருந்த குருசாமியையும், தங்காவையும் வீச்சரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே கணவன், மனைவி இருவரும் இறந்து விட்டனர். இதனிடையே தாத்தா, பாட்டியின் அலறல் சத்தம் கேட்டு விழித்த கல்லூரி மாணவி சங்கீதாவையும் அந்த கும்பல் கை மற்றும் கால்களில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

சங்கீதா வெட்டு காயத்துடன் ‘காப்பாற்றுங்கள்’ என்று கூச்சல் போடவே, அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்து அந்த மாணவியை மீட்டு மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அந்த மாணவி உடனடியாக மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த கொடூர இரட்டை கொலை சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் மற்றும் கொளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கணவன், மனைவி இருவரின் உடல்களும் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. தடயஅறிவியல் நிபுணர்கள் அங்கு விரைந்து வந்து கொலையாளிகள் விட்டுச்சென்ற தடயங்களை சேகரித்தனர். அப்போது சம்பவம் நடந்த இடத்தின் அருகே, கொலையாளிகள் பயன்படுத்திய கத்தி ஒன்றை போலீசார் கைப்பற்றினர்.

இந்த கொலை சம்பவம் குறித்து கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சொத்து தகராறு காரணமாக இந்த இரட்டை கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக இந்த கொலை நடந்ததா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த இரட்டை கொலையில் உடனடியாக துப்பு துலக்கிட, 3 தனிப்படைகளை அமைத்து போலீஸ் சூப்பிரண்டு ராஜன் உத்தரவிட்டுள்ளார். தனிப்படையினர் சந்தேகத்தின் பேரில் அந்த கிராமத்தை சேர்ந்த மாரிமுத்துவின் உறவினர்கள் சிலரை அழைத்து சென்று ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

இரட்டை கொலை சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்