டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலி

காரிமங்கலம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2017-10-11 22:45 GMT
காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பைசுஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. கூலித்தொழிலாளி. இவருடைய மகள் காயத்ரி (வயது 16). இவர் கோணங்கிநாயக்கனஅள்ளியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு காயத்திரிக்கு கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து தர்மபுரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மாணவி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்தபோது மாணவிக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து காயத்திரிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து அப்பகுதியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கொசுமருந்து அடிக்கும் பணியினை தீவிரப்படுத்தி உள்ளனர். 

மேலும் செய்திகள்