மராட்டிய அரசின் சட்ட திருத்தத்தை ஏற்க மறுப்பு ரேக்ளா பந்தயத்துக்கு தடை மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பு

மராட்டியத்தில் பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகை காலங்களில் காளை மாடுகளை வைத்து ரேக்ளா பந்தயம் விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.

Update: 2017-10-11 23:00 GMT
மும்பை,

இதில், காளை மாடுகள் துன்புறுத்தப்படுவதாக கூறி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து, ரேக்ளா பந்தயத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2014-ம் ஆண்டில் தடை விதித்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக அந்த மாநில சட்டசபையில் அவசர சட்டம் இயற்றப்பட்டது. இதேபோல், மராட்டியத்திலும் ரேக்ளா பந்தயம் நடைபெற சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்று கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, சட்டசபையில் ரேக்ளா பந்தயத்துக்கு அனுமதி அளித்து சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டது. இதனை எதிர்த்து புனேயை சேர்ந்த அஜய் என்பவர் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த ஐகோர்ட்டு, ரேக்ளா பந்தயத்துக்கு கடந்த ஆகஸ்டு 16-ந் தேதி இடைக்கால தடை விதித்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர் மற்றும் நீதிபதி என்.எம்.ஜாம்தர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாநில அரசு சார்பில் ஆஜரான வக்கீல் அஸ்பி சினோய், “ரேக்ளா பந்தயத்தில் காளை மாடுகள் துன்புறுத்தப்பட்டால், அதன் உரிமையாளர் வாழ்நாள் முழுவதும் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கும் பொருட்டு, சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இது தொடர்பான புதிய விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும். ஆகையால், ரேக்ளா பந்தயத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும்” என்று வாதிட்டார்.

இதனை கேட்டறிந்த நீதிபதிகள், ரேக்ளா பந்தயத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுப்பு தெரிவித்தனர். அவர்கள் பிறப்பித்த தீர்ப்பின் விவரம் வருமாறு:-

சட்டத்தால் ஒரு விலங்கின் உடல் வடிவமைப்பை மாற்றி, அதனை பந்தயத்தில் ஈடுபடுத்தி விட முடியுமா? என்னென்ன பாதுகாப்பு வழிமுறைகளை நீங்கள் நடைமுறைப்படுத்த போகிறீர்கள் என்பது ஒரு விஷயமே இல்லை. உண்மை என்னவென்றால் குதிரை, நாய் போன்ற விலங்குகளில் இருந்து காளை வேறுபட்டது.

காளை மாடுகளால் வேளாண் சார்ந்த தொழில்களை தான் செய்ய முடியும். அவை உடற்கூற்றியல் ரீதியாக தயாராக இல்லாதபோது, எப்படி உங்களால் அவற்றை பந்தயத்தில் ஈடுபடுத்த முடியும்?. முதல்நிலை ஆதாரத்தின்படி, மாநில அரசு மேற்கொண்ட சட்டதிருத்தம் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு இணையாக இல்லை.

ஆகையால், இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. மாநில அரசு வேண்டுமானால், சுப்ரீம் கோர்ட்டை அணுகலாம்.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்