மோட்டார் சைக்கிள்– பஸ் மோதல்; அதிகாரி பலி
மோட்டார் சைக்கிள்– பஸ் மோதிய விபத்தில் அதிகாரி பலியானார்.;
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் மறைமலைநகர் நகராட்சியில் உள்ள நந்தனார் தெருவை சேர்ந்தவர் வில்லி (வயது 54), இவர் மறைமலைநகர் ரெயில் நிலையம் அருகே உள்ள தமிழக அரசின் மாநில ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் தனது மோட்டார் சைக்கிளில் அலுவலகத்திற்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தார். மறைமலைநகர் ரெயில் நிலையம் அருகே செல்லும்போது தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற தனியார் நிறுவன பஸ் கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட வில்லிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம். தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக வில்லி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள அருள்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (37). இவர் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று பள்ளிப்பட்டு அருகே பொதட்டூர்பேட்டையில் உள்ள மாமியார் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் பாஸ்கர் சென்றார். திரும்பி வரும்போது பெட்ரோல் பங்க் அருகே சாலை வளைவில் எதிரே வந்த லாரி இவர் மீது மோதியது.
இந்த விபத்தில் பாஸ்கர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் ஆனந்தடு (37) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள ஜாப்பர்பேட்டையை சேர்ந்த 15 போ கொண்ட குழுவினர் ஒரு வேனில் திருத்தணிக்கு வந்து கொண்டு இருந்தனர். வேனை சுந்தர் (30) ஓட்டினார். அந்த வேன் திருத்தணி அருகே சோளிங்கர் சாலையில் அகூர் என்ற இடத்தில் வரும்போது திடீரென நிலை தடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் சுந்தர் மற்றும் வேனில் பயணம் செய்த பழனி (65), மல்லிகா (60), நீலம்மாள் (61), கிருஷ்ணன் (55), ரமேஷ் (40) திவ்யா (30) உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தார்கள். அவர்கள் சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து திருத்தணி இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.