பொங்கலூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலி

பொங்கலூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலியானார்.

Update: 2017-10-11 22:15 GMT
பொங்கலூர்,

பொங்கலூர் அருகே உள்ள மஞ்சப்பூரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 44). திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சவுந்தரி(37). இவர்களின் மகள்கள் தனுஸ்ரீ (14), சண்முகப்பிரியா (11), மகன் கவுசிக்(5). கடந்த சில ஆண்டுகளாக சவுந்தரி மங்கலம் அருகே புக்கிலிபாளையத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இதில் சண்முகப்பிரியா மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி மாணவி சண்முகப்பிரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். உடனே அவரை மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அவருடைய பெற்றோர் அழைத்துச்சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து மாத்திரைகளை மட்டும் கொடுத்து அனுப்பினர். ஆனால் அவருக்கு காய்ச்சல் குணமாகவில்லை.

இதனைத்தொடர்ந்து கடந்த 7-ந்தேதி திருப்பூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சண்முகப்பிரியா சிகிச்சைக்காக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

சாவு

இதனால் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சண்முகப்பிரியா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து அவருடைய உடல் மஞ்சப்பூருக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. மேலும் இதுபற்றி அறிந்த சுகாதாரத்துறையினர், மஞ்சப்பூர் பகுதியில் முகாமிட்டு வீடு, வீடாக சென்று டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

மேலும் செய்திகள்