விருத்தாசலம் மணிமுக்தாற்றில் வெள்ளப்பெருக்கு: 500 ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்

விருத்தாசலம் மணிமுக்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ராஜாவாய்க்காலில் இருந்து வெளியேற்றப் பட்ட தண்ணீர் புகுந்து 500 ஏக்கர் பயிர்கள் சேதமானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2017-10-11 23:00 GMT
விருத்தாசலம்,

விருத்தாசலத்தில் புண்ணிய நதியாக விளங்குவது மணிமுக்தாறு. ஏனெனில் ஆற்றங்கரையோரம் பஞ்சபூதங்களை மையமாக கொண்ட விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைய பெற்றது தனிச்சிறப்பாகும்.

இந்த மணிமுக்தாற்றுக்கு விழுப்புரம் மாவட்டம் கோமுகி அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் கோமுகி ஆறு வழியாக விருத்தாசலம் மணிமுக்தாற்றுக்கு வருகிறது. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் மணிமுக்தாறு தண்ணீரின்றி வறண்டது.

கோமுகி அணை

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, கல்வராயன்மலை பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக 46 அடி கொள்ளளவு கொண்ட கோமுகி அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

கடந்த 8-ந் தேதி கோமுகி அணையின் நீர்மட்டம் 43 அடியாக இருந்தது. மேலும் கல்வராயன்மலை பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் அணைக்கு நீர் வரத்து அதிகமானது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறை அதிகாரிகள் கோமுகி ஆற்றின் வழியாக தண்ணீரை வெளியேற்றினர்.

போக்குவரத்து துண்டிப்பு

இந்த தண்ணீர் கோமுகி ஆற்று வழியாக மணிமுக்தாற்றுக்கு வந்தது. இதனால் மணிமுக்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த தண்ணீர் நேற்று முன்தினம் கடலூர் மாவட்டம் இளங்கியனூருக்கு வந்தது. அங்கு இளங்கியனூர்-நல்லூர் மற்றும் பரவளூர்-கலரங்குப்பம் இடையே உள்ள தரைப்பாலங்களை வெள்ளம் அடித்துச்சென்றதால் 30 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

மேலும், இந்த திடீர் வெள்ளத்தால் மே.மாத்தூர் அணைக்கட்டு நிரம்பி வழிந்தது. இந்த நிலையில் மே.மாத்தூர் அணை நிரம்பியதால் ராஜா வாய்க்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் ராஜா வாய்க்கால் பல வருடங்களாக தூர்வாரப்படாததால், வாய்க்காலில் தண்ணீர் செல்ல முடியாமல் அருகில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்தது.

இதனால் கட்சிபெருமாநத்தம், தொரவளூர், பரவளூர் பகுதி விவசாயிகள் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்திருந்த பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மணிமுக்தாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நிலவரம் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், விருத்தாசலம் மணிமுக்தாற்றில் இன்று(நேற்று) மதியம் 2 மணி நிலவரப்படி மே.மாத்தூர் அணைக்கட்டுக்கு 15 ஆயிரத்து 444 கன அடி தண்ணீர் வந்தது. இந்த தண்ணீர் விருத்தாசலம் அணைக் கட்டுக்கு 15 ஆயிரத்து 112 கன அடியாக வந்தது. விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுமார் 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது என்றார். 

மேலும் செய்திகள்