கிரிவலப்பாதை விரிவாக்கம் செய்யும் பணி: மாடவீதிகளில் கலெக்டர் ஆய்வு
கிரிவலப்பாதையை விரிவாக்கம் செய்யும் பணியையொட்டி திருவண்ணாமலை மாடவீதிகளில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி ஆய்வு மேற்கொண்டார்.;
திருவண்ணாமலை,
கிரிவலப்பாதையை விரிவாக்கம் செய்யும் பணியையொட்டி திருவண்ணாமலை மாடவீதிகளில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி ஆய்வு மேற்கொண்டார். ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அவர் ஆலோசனை நடத்தினார்.
பஞ்சபூத ஸ்தலங்களில் முக்கிய ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகாதீப விழாவுக்கான பணிகள் நடந்து வருகின்றன. மகாதீப நாளில் லட்சம் பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தூரம் மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள்.இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கிரிவல பாதை விரிவாக்க பணிகள் நடைபெறுகிறது. தீபத்திருவிழா அன்று திருவண்ணாமலை கோவிலுக்கு பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும் என்பதால் கோவில் மாடவீதிகளில் உள்ள செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து நேற்று காலை கலெக்டர் கந்தசாமி, அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாடவீதிகளை சுற்றி நடந்துசென்று விரிவாக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–இந்த ஆண்டு தீபத்திருவிழாவை மிகவும் சிறப்பாக நடத்த மாவட்ட நிர்வாகம் முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதை முன்னிட்டு மாடவீதிகளை விரிவாக்கம் செய்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட உள்ளது. போக்குவரத்தை மாற்றம் செய்து தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது திருவண்ணாமலை உதவி –கலெக்டர் உமாமகேஸ்வரி, பயிற்சி கலெக்டர் சுரேஷ், நகராட்சி ஆணையாளர் பாரிஜாதம் உள்பட பலர் உடனிருந்தனர்.
கலெக்டர் கந்தசாமி மாடவீதிகளில் ஆய்வு மேற்கொண்ட பின்பு திருவண்ணாமலை உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி, ராஜகோபுரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ராஜகோபுரம் பகுதியில் உள்ள கடைகள் பல பொதுப்பாதைகளை ஆக்கிரமித்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து பொதுப்பாதைகளில் ஆக்கிரமிப்பு செய்த ஒருசில கடைகளையும், மற்றும் பலகைகள், தட்டிகளையும் அகற்ற உத்தரவிட்டார்.