விழுப்புரம், விருத்தாசலத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 2 பேர் பலி

தமிழகத்தில் கடந்த 2 மாதமாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதில் தினமும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

Update: 2017-10-11 10:00 GMT
விக்கிரவாண்டி,

இதனை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆனால், டெங்கு காய்ச்சல் ஒழிந்தபாடில்லை.

கடலூர், விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தமட்டில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதில் இதுவரை விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலால் 11 பேர் இறந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மேலும் ஒருவர் பலியானார். அதன் விவரம் வருமாறு:-

விக்கிரவாண்டி தாலுகா கணபதிப்பட்டு காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணி மனைவி தேவகி (வயது 63). இவருக்கு கடந்த 7-ந் தேதி மதியம் திடீரென வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. மேலும் காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டார்.
உடனே அவரை சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர். அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட தேவகிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் காய்ச்சல் குணமாகவில்லை. தொடர்ந்து, அவருடைய ரத்த மாதிரியை எடுத்து டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது தேவகி, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.

இதையடுத்து அவரை தனி வார்டில் அனுமதித்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் இறந்தார். டெங்கு காய்ச்சலால் தேவகி இறந்ததையடுத்து கணபதிப்பட்டு கிராமத்தில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த கிராமத்தில் வேறு யாருக்காவது டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதா? என்று மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து வருகின்றனர். தற்போது தேவகி இறந்துள்ளதால் டெங்கு காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

விருத்தாசலம் அருகே உள்ள மங்கலம்பேட்டை கோவிலானூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியன். இவரது மகன் அருமைநாதன்(28). கூலி தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவரை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குணமாகவில்லை. இதையடுத்து அவர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அங்கும் அவருக்கு காய்ச்சல் குணமாகவில்லை. பின்னர் அருமைநாதனை, அவருடைய பெற்றோர் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அருமை நாதன் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி அறிந்த மங்கலம்பேட்டை சுகாதாரத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அப்பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தீவிர சிகிச்சையும் ஆலோசனையும் வழங்கி வருகின்றனர். மேலும் வெளியூர்களில் இருந்து இங்கு வந்து தங்கியிருப்பவர்களின் பட்டியலையும் அவர்கள் தயாரித்து வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த வீடு, வீடாக சென்று நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு ஆகியவற்றை வழங்கி வருகின்றனர்.

மேலும் செய்திகள்