எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஆட்சிகாலத்தை முழுமையாக பூர்த்தி செய்யும் குமரகுரு எம்.எல்.ஏ. பேட்டி

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஆட்சி காலத்தை முழுமையாக பூர்த்தி செய்யும் என்று குமரகுரு எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2017-10-11 06:33 GMT
திருக்கோவிலூர்,

விழுப்புரம் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆர்.குமரகுரு எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மனசாட்சிபடி தற்போது அரசு செயல்பட்டு வருகிறது. இதனை மக்கள் ஏற்று கொண்டு ஆதரவு அளித்து வருகின்றனர். ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்-அமைச்சர் ஆகிவிடலாம் என்ற ஏக்கத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாரம் ஒரு கெடு வைக்கிறார்.

அ.தி.மு.க. ஆட்சியை அகற்றிவிடலாம் என்ற கனவு காணும் மு.க.ஸ்டாலின் முதலில் அவரது கட்சி பிரச்சினையை கவனிக்க வேண்டும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அறிவிக்கும் ஒவ்வொரு திட்டங்களும் சாதாரண அடித்தட்டு மக்கள் பயன்பெறும் வகையில் உள்ளது. ஒவ்வொரு துறையிலும் அறிவிக்கிற திட்டங்கள் அந்த துறையை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்கிறது.

மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை மாவட்டம் தோறும் நடத்தி வரும் நிலையில், வேற்றுமை எண்ணத்தில் இருந்த அ.தி.மு.க. தொண்டர்களும் அதனை மறந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பலம் சேர்க்கும் வகையில் அணி திரள்கிறார்கள். இதுதான் இன்றைய நிலை.
ஆட்சியிலும் சரி, கட்சியிலும் சரி முதல்-அமைச்சருக்கு ஆதரவு பெருகிவருவதை தாங்கி கொள்ள முடியாத மு.க.ஸ்டாலின், தனது முதல்-அமைச்சர் கனவு, கனவாகவே ஆகிவிடும் என்று தினமும் அறிக்கை, பேட்டி கொடுத்து வருகிறார். மேலும், தி.மு.க.வினரும் மக்களை குழப்பும் வகையில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வருகின்றனர். இதனை தமிழக மக்கள் நம்ப தயாராக இல்லை என்பது வேறுவிஷயம்.

ஒட்டுமொத்த அ.தி.மு.க. தொண்டர்களும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பக்கம் உள்ளனர். தமிழக மக்களும் இந்த அரசுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்பு தேர்தலாக இருந்தாலும், 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலானாலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறுவது நிதர்சன உண்மை. எனவே, இந்த அரசு தனது ஆட்சி காலத்தை முழுமையாக பூர்த்தி செய்யும் என்பதை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு குமரகுரு எம்.எல்.ஏ. கூறினார்.

மேலும் செய்திகள்