புதிய குடிநீர் திட்டம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்

தேனி நகர மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில், ரூ.68 கோடியே 83 லட்சம் மதிப்பிலான

Update: 2017-10-11 13:30 GMT
ஆண்டிப்பட்டி,

புதிய குடிநீர் திட்டம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து, தேனி நகருக்கு குடிநீர் வழங்கும் வகையில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த ரூ.68 கோடியே 83 லட்சத்தை அரசு ஒதுக்கீடு செய்தது. ஒரு வருடமாக நடந்த குடிநீர் திட்ட பணிகள் கடந்த ஆண்டு முடிவடைந்தது.

ஆனால் வைகை அணையில் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால், புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்தினை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 50 அடியை தாண்டியுள்ளது.

இதனையடுத்து வைகை அணையில் இருந்து, தேனி கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு சோதனை ஓட்டமாக கடந்த 10 நாட்களாக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டப்பணியை, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஆய்வு செய்தார்.

தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்ட ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறும்போது, தேனி நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வைகை அணை கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது சோதனை பணிகள் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்தவுடன், தேனி நகரில் வசிக்கும் மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க முடியும். இந்த புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார்.

ஆய்வின் போது கலெக்டர் வெங்கடாசலம், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், ஜக்கையன் எம்.எல்.ஏ., கடமலை-மயிலை ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் முருக்கோடை ராமர், மாவட்ட அரசு வக்கீல் டி.கே.ஆர்.கணேசன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்