தியாகராயநகர் நகைக்கடையில் இருந்து ரூ.50 லட்சத்துடன் மாயமான காவலாளி சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண்

சென்னை தியாகராயநகரில் உள்ள பிரபல நகைக்கடையில் இருந்து ரூ.50 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்று தலைமறைவாக இருந்து வந்த காவலாளி சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்தார்.

Update: 2017-10-11 00:42 GMT

ஆலந்தூர்,

சென்னை தியாகராயநகர் வடக்கு உஸ்மான் ரோட்டில் பிரபல நகைக்கடை உள்ளது. இங்கு நகைகளை அடகு வைத்தல், பழைய நகைகளை வாங்குவது போன்ற தங்கநகை தொடர்பான அனைத்து வியாபாரங்களும் செய்யப்பட்டு வருகிறது. இந்த நகைக்கடையின் தலைமை அலுவலகம் பெங்களூருவில் செயல்பட்டு வருகிறது.

அங்கிருந்து நகை கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு பரிமாற்றங்களுக்காக கோடிக்கணக்கில் பணத்தை ஊழியர்கள் அடிக்கடி சென்னைக்கு எடுத்து வருவது வழக்கம். அதன்படி கடந்த மாதம் (செப்டம்பர்) 5–ந்தேதி தியாகராயநகர் கடையின் காசாளர் ராதாகிருஷ்ணன் பெங்களூருவில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து ரூ.50 லட்சம் வாங்கிக்கொண்டு சென்னை வந்தார்.

அப்போது அலுவலகத்தில் உத்தரகாண்டை சேர்ந்த காவலாளி அயோத்தியநாத் யாதவ் (வயது 48) துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அவரிடம் ரூ.50 லட்சத்தை ஒப்படைத்த ராதாகிருஷ்ணன், அதற்குரிய ஆவணங்களில் கையெழுத்திட்டு, நகைக்கடையின் அக்கவுண்ட்ஸ் மேலாளர் முருகேசன் என்பவரிடம் தகவல் தெரிவித்துவிட்டு வீட்டுக்கு சென்றார்.

இதையடுத்து கடை மேலாளர் தினகரன் வந்து பார்த்தபோது, காவலாளி அயோத்தியநாத் யாதவை காணவில்லை. அவர் ரூ.50 லட்சத்துடன் அங்கிருந்து தப்பியோடியது தெரியவந்தது.

இதுகுறித்து தினகரன் பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அயோத்தியநாத் யாதவை தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.

இந்தநிலையில், கடந்த 35 நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த அவர், சென்னை சைதாப்பேட்டை பெருநகர 17–வது கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு அங்காளஈஸ்வரி முன்னிலையில் சரண் அடைந்தார். இதையடுத்து அயோத்தியநாத் யாதவை வருகிற 24–ந்தேதி வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்