திருவள்ளூர் மாவட்டத்தில் மீன் பண்ணை குளங்கள் அமைக்க மானியம்

திருவள்ளூர் மாவட்டத்தில் மீன் பண்ணை குளங்கள் அமைக்க மானியம் வழங்கப்படும் என்று கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

Update: 2017-10-11 00:21 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை மூலம் மத்திய அரசின் ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் மீன்வள மேலாண்மை மற்றும் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் மீன்வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்கள் நன்னீர் மீன்வளர்ப்பு, உவர் நீர் இறால் வளர்ப்பு மேற்கொள்ளலாம். புதிய மீன்பண்ணை குளங்கள், குட்டைகள் அமைக்க ஒரு ஹெக்டேருக்கு ஆகும் செலவினத்தொகை ரூ.7 லட்சத்தில் 50 சதவீதம் மானிய தொகையான ரூ.3½ லட்சம் வழங்கப்படும்.

ஏற்கனவே உள்ள மீன்வளர்ப்பு குளங்கள் , தொட்டிகளை சீரமைத்தல், புதுப்பித்தலுக்கு ஒரு ஹெக்டேருக்கு ஆகும் செலவினத்தொகை ரூ.3½ லட்சத்தில் 50 சதவீதம் மானியத்தொகையான ரூ.1¾ லட்சம் வழங்கப்படும். நன்னீர் மீன்வளர்ப்பு இடுபொருள் செலவினம் ஒரு ஹெக்டேருக்கு ஆகும் செலவினத்தொகை ரூ.1½ லட்சத்தில் மானியத்தொகையான ரூ.75 ஆயிரம் வழங்கப்படும்.

உவர்நீர் இறால் வளர்ப்பு இடுபொருள் செலவினம் ஒரு ஹெக்டேருக்கு ஆகும் செலவினத்தொகை ரூ. 3 லட்சத்தில் 50 சதவீத மானியம் ரூ.1½ லட்சம் வழங்கப்படும். பட்டியல் இனத்தவர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பம் உள்ளவர்கள் வருகிற 1-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மீன்துறை உதவி இயக்குனர் திருவொற்றியூர் சாலை, பொன்னேரி என்ற முகவரியை தொடர்பு கொண்டு உரிய விவரம் பெற்று பயன் பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்