மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களுக்கு தமிழக அரசு துணை நிற்கிறது

ஆட்சியை காப்பாற்றி கொள்ள மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களுக்கு தமிழக அரசு துணை நிற்கிறது என்று த.மா.கா. இளைஞர் அணி தலைவர் யுவராஜா கூறினார்.

Update: 2017-10-10 23:48 GMT
பொள்ளாச்சி,

பொள்ளாச்சி- உடுமலை ரோட்டில் த.மா.கா. மாநில இளைஞர் அணி தலைவர் யுவராஜா ஒரு தனியார் உணவக கூட்டரங்கில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தலை மையப்படுத்தி இல்லந்தோறும் த.மா.கா., உள்ளந்தோறும் வாசன் என்பது குறித்த ஸ்டிக்கர் தமிழகம் முழுவதும் வீடு, வீடாக ஓட்டும் பணியில் இளைஞர் அணியினர் ஈடுபட்டு உள்ளனர். இந்த பணிகள் இன்னும் 2 மாதம் வரை நடைபெறும்.

இதன் மூலம் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பு ஏற்படும். தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழக அரசு உணர்வுப்பூர்வமான எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது கண்டனத்துக்குரியது.

சுகாதார பணிகளை தீவிரப்படுத்தி கொசுக்களை ஒழிக்க வேண்டும். பொதுமக்களிடையே டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். டெங்கு காய்ச்சலால் இறந்தவர்களின் குடும்பத் துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப் படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கெயில் திட்டத்தால் கோவை, திருப்பூர், ஈரோடு உள்பட 7 மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த திட்டத்தை எதிர்த்து இன்னும் ஓரிரு நாட்களில் ஈரோட்டில் போராட்டம் நடத் தப்படும். ஆட்சியை காப்பாற்றி கொள்ள மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களுக்கு தமிழக அரசு துணை நிற்கிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை மாதம் ஒரு முறை நிர்ணயம் செய்ய வேண்டும். விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களிடம் மத்திய அரசு பெற வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை இப்போது முடிவு செய்ய முடியாது. அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும்.

தியேட்டர்களுக்கு விதிக்கப்பட்ட அதிக கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். மேலும் தியேட் டர்களில் அதிக விலைக்கு திண்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகிறது. முதலில் அவற்றின் விலையை குறைத்து விட்டு, அதன்பிறகு கட்டண உயர்வு குறித்து பேச வேண்டும்.

மேலும் நடிகர்களை தவிர்க்க வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு. சுய விளம்பரத்துக்காக சமுதாய கருத்துகளை நடிகர்கள் தெரிவித்து வருகின்றனர். பொதுமக்கள் மீது நடிகர்களுக்கு அக்கறை கிடையாது.

வறட்சியால் பொள்ளாச்சி பகுதியில் மட்டும் 40 சதவீத தென்னை மரங்கள் காய்ந்து விட்டன. காய்ந்த தென்னை மரங்களை வெட்டி அகற்ற அதிக செலவாகிறது. இதற்கு அரசு மானியம் வழங்க வேண்டும். தென்னையை தாக்கும் வெள்ளை ஈயை கட்டுப்படுத்த இலவசமாக மருந்துகள் வழங்க வேண்டும்.

தற்போது பெய்து உள்ள மழை மற்றும் அணைகளில் திறக்கப்பட்டு உள்ள நீரை பயன்படுத்தி விவசாயம் செய்ய விரைவில் பயிர் கடன் வழங்க வேண்டும். பி.ஏ.பி. பாசன விவசாயிகளுக்கு கடைமடை வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாநில செயற்குழு உறுப்பினர் பழனி செவ்வேள், கோவை தெற்கு மாவட்ட தலைவர் குணசேகரன், மாவட்ட செயலாளர் பிரியங்கா ராமசாமி, இளைஞர் அணி மாவட்ட தலைவர் மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக அவர் கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். 

மேலும் செய்திகள்