எடியூரப்பா-மத்திய மந்திரி அனந்தகுமார் மீது வழக்கு தொடர நடவடிக்கை சித்தராமையாவுடன் போலீஸ் கமிஷனர் ஆலோசனை
பா.ஜனதா மேலிடத்திற்கு பணம் கொடுத்த விவகாரம் தொடர்பாக எடியூரப்பா, மத்திய மந்திரி அனந்த குமார் மீது ஊழல் தடுப்புப்படை வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பெங்களூரு,
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேல்-சபை உறுப்பினரான கோவிந்தராஜ் வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ஒரு குறிப்பேட்டை கைப்பற்றினார்கள்.
குரல் பரிசோதனை
அதில், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்கள் கட்சி மேலிடத்திற்கு பல கோடி ரூபாய் கொடுத்திருப்பதாக கோவிந்தராஜ் எழுதி வைத்திருப்பதாக பா.ஜனதாவினர் குற்றம்சாட்டினார்கள். இந்த நிலையில் மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் வைத்து எடியூரப்பாவும், மத்திய மந்திரி அனந்தகுமாரும் நாமும் பா.ஜனதா மேலிடத்திற்கு பணம் கொடுத்துள்ளோம் என்று பேசுவதுபோல் ஆடியோ சி.டி.யை(குறுந்தகடு) காங்கிரஸ் கட்சியினர் வெளியிட்டனர்.
அந்த சி.டியில் இடம்பெற்று இருப்பது எடியூரப்பா, அனந்தகுமார் ஆகியோரின் குரல் தானா? என்பதை கண்டறிய குரல் பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த பரிசோதனையில் காங்கிரஸ் கட்சியினர் வெளியிட்ட சி.டி.யில் பதிவாகி இருந்த உரையாடல் எடியூரப்பா, அனந்தகுமார் ஆகியோர் இடையே நடைபெற்றதுதான் என்பது தெரியவந்தது. இதன் மூலம் அவர்கள் 2 பேரும் பா.ஜனதா மேலிடத்துக்கு பணம் வழங்கியது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து “சைபர் கிரைம்” போலீசார் எடியூரப்பா, அனந்தகுமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் பா.ஜனதா மேலிடத்திற்கு பணம் கொடுத்தது தொடர்பாக எடியூரப்பா, அனந்தகுமார் மீது ஊழல் தடுப்பு படையில் வழக்குப்பதிவு செய்ய கர்நாடக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சித்தராமையாவுடன் ஆலோசனை
இந்த நிலையில், பெங்களூருவில் நேற்று காலையில் முதல்-மந்திரி சித்தராமையாவை, மாநகர போலீஸ் கமிஷனர் சுனில்குமார், போலீஸ் மந்திரியின் ஆலோசகர் கெம்பையா ஆகியோர் திடீரென்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். அப்போது காங்கிரஸ் வெளியிட்ட குறுந் தகட்டில் இடம்பெற்று இருப்பது எடியூரப்பா, அனந்தகுமார் இடையே நடந்த உரையாடல் தான் என்பது உறுதியாகி இருப்பதால், அவர்கள் மீது ஊழல் தடுப்பு படை போலீசில் வழக்குப்பதிவு செய்யலாமா? என்பது குறித்து போலீஸ் கமிஷனருடன், முதல்-மந்திரி சித்தராமையா ஆலோசித்ததாக கூறப்படு கிறது.
மேலும் எந்த சட்டப்பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தால், காங்கிரஸ் கட்சிக்கு ஆதாயம் கிடைக்கும் என்றும், ஊழல் தடுப்பு படையில் வழக்குப்பதிவு செய்தால் எடியூரப்பா, அனந்தகுமாருக்கு அரசியலில் நெருக்கடி கொடுக்க முடியுமா? உள்ளிட்டவை குறித்து போலீஸ் கமிஷனர், ஆலோசகர் கெம்பையாவிடம் சில தகவல்களை கேட்டு முதல்-மந்திரி சித்தராமையா பெற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆலோசனை முடிந்ததும் முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்டப்படி நடவடிக்கை
“பா.ஜனதா மேலிடத்திற்கு பணம் கொடுத்திருப்பதாக கூறி எடியூரப்பாவும், அனந்தகுமாரும் பேசியது உண்மை தான் என்பது தெரியவந்து உள்ளது. இதுகுறித்து போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள். எடியூரப்பா, அனந்தகுமார் மீது வழக்குப்பதிவு செய்ய நான் ஒன்றும் போலீஸ் அல்ல. அவர்கள் தவறு செய்திருந்தால், அதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவார்கள்.
போலீஸ் துறையில் எனது தலையீடு எதுவும் இருக்காது. ஊழல் தடுப்பு படையில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது தொடர்பாக போலீஸ் கமிஷனருடன் ஆலோசிக்கவில்லை. சட்டம்-ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு குறித்து போலீஸ் கமிஷனருடன் பேசினேன்.”
இவ்வாறு முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.