ஓய்வு பெற்ற தனியார் வங்கி மேலாளர் வீட்டில் ரூ.4½ லட்சம் தங்கநகைகள் திருட்டு
தார்வார் டவுனில் ஓய்வு பெற்ற தனியார் வங்கி மேலாளர் வீட்டில் புகுந்து ரூ.4½ லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
உப்பள்ளி,
தார்வார் உபநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சாதனகேரி பகுதியை சேர்ந்தவர் ரகுநந்தன தின்னால் (வயது 65). ஓய்வு பெற்ற தனியார் வங்கி மேலாளர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் பெலகாவியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். அங்கிருந்து ரகுநந்தன தின்னால் நேற்று முன்தினம் வீடு திரும்பினார்.
அப்போது அவருடைய வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.
ரூ.4½ லட்சம் தங்க நகைகள் திருட்டு
மேலும் வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்க நகைகள் மாயமாகி இருந்தது. இதனால், யாரோ மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.4½ லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ரகுநந்தன தின்னால், தார்வார் உபநகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாயும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். நாய் சிறிது தூரம் மோப்பம் பிடித்து ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இதையடுத்து போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் மர்மநபர்களின் ரேகைகளை பதிவு செய்துகொண்டனர். இதுகுறித்து தார்வார் உபநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.