வேலைநிறுத்த போராட்டம் : மராட்டியம் முழுவதும் 10 லட்சம் லாரிகள் ஓடவில்லை

மராட்டியம் முழுவதும் நேற்று நடைபெற்ற வேலை நிறுத்தத்தால் 10 லட்சம் லாரிகள் ஓடவில்லை. அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது.

Update: 2017-10-09 22:00 GMT
புதுடெல்லி,

டீசல் விலை உயர்வு, ஜி.எஸ்.டி., சுங்க கட்டண கொள்கை போன்றவைக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் (ஏ.ஐ.எம்.டி.சி.) சார்பில் நாடு முழுவதும் 2 நாள் லாரிகள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

வேலைநிறுத்தம்

அதன்படி நாடு முழுவதும் நேற்று லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கியது. இந்த வேலை நிறுத்தத்தின் முதல் நாளான நேற்று தலைநகர் டெல்லி, மும்பை உள்பட நாடு முழுவதும் லாரி போக்குவரத்து கடுமையாக முடங்கியது. மும்பையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட லாரி டிரைவர்கள், மான்கூர்டு சோதனைச்சாவடியில் தர்ணா போராட்டம் நடத்தினர்.

இதனால், மும்பையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் சரக்குகள் மற்றும் வெளியூர்களில் இருந்து மும்பைக்கு வரும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்து முடங்கியது.

ஜவுளி, பட்டாசுகள் தேக்கம்

இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் ஜவுளிகள் மற்றும் பட்டாசுகளையும் கொண்டு செல்ல முடியாமல் அந்த பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளது. லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த டிரைவர்கள் மற்றும் கிளனர்கள் அந்த இடங்களிலேயே சமைத்து சாப்பிட்டனர்.

மராட்டியத்தில் நேற்று மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட லாரிகள் ஓடவில்லை. இந்த முதல் நாள் போராட்டம் முழு வெற்றியடைந்து இருப்பதாக ஏ.ஐ.எம்.டி.சி. தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் மையக்குழு தலைவர் பால் மால்கிட் சிங் மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசு பொறுப்பு

எங்கள் 2 நாள் வேலை நிறுத்தத்தின் முதல் நாளான இன்று (நேற்று) நாடு முழுவதும் 70 முதல் 80 சதவீத வர்த்தகம் முடங்கி உள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கு நாங்கள் விலக்கு அளித்து இருந்த போதும், பொருட்களின் வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த வேலைநிறுத்த போராட்டத்தால், பொதுமக்களுக்கு அசவுகரியம் ஏற்பட்டிருந்தால், அதற்கு அரசு தான் பொறுப்பு.

அரசின் திணறடிக்கும் கொள்கைகள் காரணமாக நாடு முழுவதும் 93 லட்சம் லாரி ஓட்டுனர்களும், மற்ற போக்குவரத்து அமைப்புகளும் கடுமையான நஷ்டத்தையும், துன்புறுத்தல்களையும் சந்திக்கின்றனர். ஆகையால், இன்னல்களை சந்தித்து வரும் அவர்கள் இந்த போராட்டத்தில் பங்கெடுத்தனர்.

அடையாள போராட்டம்

இது வெறும் அடையாள போராட்டம் தான். எங்களது கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்றால், தீபாவளி முடிந்ததும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட நேரிடும். டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்பெல்லைக்குள் கொண்டு வந்து, நாடு முழுவதும் சீரான விலையை நிர்ணயம் செய்யவும், விலையை காலாண்டு அடிப்படையில் திருத்தவும் இது தான் சரியான தருணம்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்