பி.கே.சி.யில் ரூ.9 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல் காங்கிரஸ் பிரமுகர் உள்பட 3 பேர் கைது
மும்பை பி.கே.சியில் ரூ.9 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல் செயயப்பட்டன. இது தொடர்பாக காங்கிரஸ் பிரமுகர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;
மும்பை,
மும்பை பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ் (பி.கே.சி.) பகுதியில் சம்பவத்தன்று ஒருவர் கள்ளநோட்டுகளுடன் வரவுள்ளதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பையில் பெரிய பையுடன் காங்கிரஸ் கட்சியின் வடமத்திய மும்பை பொதுச் செயலாளர் ஹாஜி இம்ரான் சேக் நின்று கொண்டிருந்தார்.
அவர் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை பிடித்து சோதனையிட்டனர். இதில், அவர் வைத்திருந்த பைக்குள் கத்தை, கத்தையாக 500 ரூபாய்க்கான கள்ள நோட்டுகள் இருந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், அவற்றை பறிமுதல் செய்தனர்.
காங்கிரஸ் நிர்வாகி கைது
இதையடுத்து ஹாஜி இம்ரான் சேக் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அந்த பையில் மொத்தம் ரூ.9 லட்சத்துக்கான கள்ளநோட்டுகள் இருந்தது தெரியவந்தது. மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த உறவினர் சாகித் சேக் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
இருவரது வீட்டிலும் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். பறிமுதல் செய்யப்பட்ட கள்ளநோட்டுகளை பாந்திராவை சேர்ந்த கட்டுமான அதிபர் மகேஷ் அலிம்சந்தானி என்பவரிடம் இருந்து ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்துக்கு வாங்கியதாக இருவரும் தெரிவித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கட்டுமான அதிபர் மகேஷ் அலிம்சந்தானியும் கைதானார்.
புனேயை சேர்ந்தவர்
கைதான கட்டுமான அதிபரிடம் விசாரித்ததில், கள்ளநோட்டுகளை புனேயை சேர்ந்த தொழில் அதிபர் சிவாஜி கேடேகரிடம் இருந்து வாங்கியதாக கூறினார்.
அந்த நபர் ஏற்கனவே ஒரு கள்ளநோட்டு வழக்கில் அகமதுநகர் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. அவரிடமும் விசாரணை நடத்த வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்டு உள்ள கள்ளநோட்டுகள் வங்கதேசத்தில் அச்சிடப்பட்டு கொண்டு வந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கைதான 3 பேரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.