மதுவுக்கு எதிராக டெல்லியில் போராடிய ‘வாள் சண்டை வீரர்’ எங்கே? கண்டுபிடிக்க கோரி மனு

மதுவுக்கு எதிராக டெல்லியில் போராடிய ‘வாள்சண்டை வீரர்` மாயமானார். அவரை கண்டுபிடிக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்கள் மனு கொடுத்தனர்.

Update: 2017-10-09 23:00 GMT
நாகர்கோவில்,

திருவட்டார் அருகே தேமானூர் வட்டவிளை பகுதியைச் சேர்ந்தவர் டேவிட். இவர் வாள்சண்டை விளையாட்டு வீரர். இந்த விளையாட்டில் இவர் தேசிய அளவில் பதக்கம் பெற்றுள்ளார். இந்தநிலையில் அவர் மதுவுக்கு எதிரான போராட்டங்களில் தீவிரம் காட்டினார். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி பல போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில மாதங்களாக டெல்லியில் இருந்து மதுவுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார்.

இந்தநிலையில் அவருடைய தாயார் ஒய்சி, சகோதரி மினிஜோஷி மற்றும் உறவினர்கள் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், கடந்த 6 மாதத்துக்கு முன் டெல்லியில் மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்காக யாத்திரை சென்ற டேவிட் பற்றி இந்நாள் வரை எந்த தகவலும் இல்லை. எனவே அவரை கண்டுபிடித்து, மீட்டுத்தர துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளனர்.

மேலும், டேவிட் மீட்கப்படும் பட்சத்தில் அவன் மீது போலீசார் பதிவு செய்துள்ள வழக்குகள் அத்தனையையும் ரத்து செய்து, அவனும் சமூகத்தில் நல்ல முறையில் வாழ போலீசார் உதவ வேண்டும் என்று டேவிட் உறவினர்கள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்