குலசேகரன்பட்டினத்தில் பள்ளிக்கூட வேன்கள் மோதல்; 4 மாணவர்கள் உள்பட 6 பேர் படுகாயம்

குலசேகரன்பட்டினத்தில் பள்ளிக்கூட வேன்கள் மோதிய விபத்தில் 4 மாணவர்கள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2017-10-09 23:00 GMT
குலசேகரன்பட்டினம்,

உடன்குடி தேரியூரில் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. நேற்று மாலையில் பள்ளிக்கூடம் முடிந்ததும், வழக்கம்போல் மாணவ-மாணவிகள் தங்களது வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். குலசேகரன்பட்டினம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகளை ஏற்றிக் கொண்டு, பள்ளிக்கூட வேன் புறப்பட்டு சென்றது. உடன்குடி அருகே வெள்ளாளன்விளை சுதந்திரநகரைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் பாலமுருகன் (வயது 34) வேனை ஓட்டினார்.

இதேபோன்று தட்டார்மடம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை தனியார் பள்ளிக்கூட மாணவர்கள் நேற்று தூத்துக்குடியில் நடந்த புத்தக கண்காட்சிக்கு பள்ளிக்கூட வேனில் சென்றனர். பின்னர் மாலையில் அவர்கள் வேனில் கொம்மடிக்கோட்டைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். கொம்மடிக்கோட்டையைச் சேர்ந்த ரெக்ஸ் (65) வேனை ஓட்டினார்.

குலசேகரன்பட்டினம் பைபாஸ் ரோடு கருங்காலி அம்மன் கோவில் தெரு, புது தெரு சந்திப்பு பகுதியில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக 2 பள்ளிக்கூட வேன்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. மோதிய வேகத்தில் 2 வேன்களும் சாலையோர பள்ளத்தில் பாய்ந்தவாறு நின்றன. வேன்களின் முன்பக்க கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன.

இந்த விபத்தில் உடன்குடி தேரியூர் பள்ளிக்கூட வேனில் இருந்த மாணவர்களான குலசேகரன்பட்டினத்தைச் சேர்ந்த தனுஷ்கோடி மகன் விஜயசங்கர் (10), நாகராஜ் மகன் அருண்குமார் (10), டிரைவர் பாலமுருகன் ஆகியோரும், கொம்மடிக்கோட்டை பள்ளிக்கூட வேனில் இருந்த மாணவர்களான பொத்தக்காலன்விளையைச் சேர்ந்த சந்தோஷ்ராஜ் மகன் அன்டனி பெலிக்ஸ்ராஜா (13), பூவுடையார்புரத்தைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் சூர்யா (12), டிரைவர் ரெக்ஸ் ஆகியோரும் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அஜித்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதித்தனர். கைவிரல்கள் துண்டாகி பலத்த காயம் அடைந்த மாணவர் விஜயசங்கரை மேல் சிகிச்சைக்காக நெல்லை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்